HR உன்ன கூப்பிடுறார் …. (1)

நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது இவனுக்கு ஒரு நல்ல வேலையா பார்த்து கொடுங்க, 25 ஆயிரமாச்சும் உள்ள வேலையா பார்த்து சொல்லுங்க, எனும் அன்புக்கட்டளை என்னைப்போன்ற நிறைய HRகளுக்கு அடிக்கடி வரும். இந்த கட்டளைகளுக்கு ஆமா சொல்லுவதா? இல்ல, அப்படி இப்படினு ஏதாவது காரணத்தைச் சொல்லி புரிய வைப்பதா? பலர் ஆமாம் சொல்லியே அந்த நேரத்தில் இருந்து தப்பிக்கப் பார்ப்பார்கள். எதிர்பார்ப்பது தவறல்ல, அதே நேரத்தில், அந்த எதிர்பார்ப்பை அடைவதற்கான தகுதிகள், திறமைகள் நம்மிடம் உள்ளதா? எனப் பார்த்து, இருந்தால் மிக உறுதியோடும், இல்லையென்றால் நம்மை நாமே தகுதிப்படுத்தி அதை நோக்கிச் செல்வதும் சரியான அணுகுமுறையாக இருக்கும்.

எனக்குத் தெரிந்த ஒரு மாணவன் எனக்கு இத்தனை ரூபாய் சம்பளம் கிடைச்சாதான் வேலைக்கு போவேன். எவ்வளவு கஷ்டப்பட்டு நிறைய செலவழிச்சு படிச்சிருக்கேன் தெரியுமா என்று சொல்வதை கேட்டுள்ளேன். என்னிடம் Internship (படிக்கும் காலத்தில் வேலை பற்றிய அனுபவம் பெற கல்லூரியிலிருந்து நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுப்பும் முறை) செய்த மாணவரில் ஒருவர், சார், என்ன வேலை என்றாலும் நான் செய்யத் தயார் முதலில் வேலையை கத்திட்டு அதற்குத் தேவையான திறனையும் வளர்த்துக்கொண்டு எனக்கான சம்பளத்தை உரிமையோடு கேட்பேன் என்று சொன்ன அவர், இன்று, அவர் சொல்லியதை விட அதிகமாகவே சம்பளம் பெற்று உயர் பொறுப்பில் உள்ளார்.

இருவருக்குமே இருந்தது எதிர்பார்ப்புதான். ஒருவர் எதிர்பார்ப்போடு இருந்துவிட்டார், இன்னொருவரோ அதற்கான செயல்திட்டம் வகுத்து தீரா ஆர்வத்தை மனதில் விதைத்து அதை நோக்கி வெற்றி எண்ணத்தோடு பயணித்தார். வெற்றியும் கண்டார். எதிர்ப்பார்ப்பை செயல்படுத்தும்போது எதிர்பாரா வெற்றியல்ல, எதிர்பார்த்த வெற்றியே கிடைக்கும். அப்படியானால் எதிர்பார்ப்பது தவறா? இவ்விருவரையும் ஒப்பிடுவதும் சரிதானா? எனக் கேட்கலாம்.  நம்மை பிறரோடு ஒப்பிட வேண்டாம், மாறாக நம்மைப் பற்றி நாமே மதிப்பிட கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் நம்மை உயர்நிலைக்கு கொண்டு செல்லும். அந்த மதிப்பிடலை HR Team எப்படிக் கையாளுகிறது என்பதை இனி வரும் வாரங்களில் காணலாம்.

எதிர்பார்ப்பை நிறைவேற்ற நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒன்று ஒழுங்கு. இந்தத் தொடரை எழுதுவதற்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை வெளிவர முயற்சி எடுக்கும் அதேவேளையில் அதைக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பதிப்பாளரிடம் தரவேண்டியது என் கடமை அந்தக் கடமை ஒழுங்கின் அடிப்படையிலேயே வரும். அதை சரியான நேரத்தில் தர என்னிடம் ஒழுங்கு இருக்க வேண்டும் அதைக் கடைப்பிடிக்க உறுதி கொண்டுள்ளேன். ஆதலால், நாம் ஏற்படுத்திக்கொள்ளும் ஒழுங்குமுறை தான் நம்மை பிறரிடமிருந்து பிரித்து ஒரு தனித்த அடையாளத்தைத் தரும். அந்த தனித்த அடையாளம் மூலமாகத்தான் அச்சமின்றி உச்சம் தொட முடியும். ஒழுங்கு சரி, ஒழுக்கம் என்பது எதைக் குறிக்கும் எனும் விவாதத்திற்கு உள்ளே நாம் இப்போது செல்ல வேண்டாம். இதைப் பற்றின தெளிவு இனி நாம் பயணிக்கப் போகும் வாரங்களில் நாம் புரிந்து கொள்ளலாம். ஓ.. இப்படி இருந்தாலே போதுமா? வெற்றி உடனே கிடைத்து விடுமா? எனும் கேள்வி வரும். இன்னொருவரை தோற்கடிப்பதில் அல்ல வெற்றி. ஒவ்வொரு முறையும் அடுத்து எப்படி என்னை சிறப்பாக செம்மைப் படுத்துவது என்பதே வெற்றியாக இருக்கும். உங்களால் ஒரு காரியத்தை முடிக்க முடியும் என்றால் முடியும், முடியாது என்றால் முடியாது இதுவே மனதின் அரிய ஆற்றல் என்று ஹென்றி போர்ட் கூறுகிறார்.

மனது வைத்தாலே போதுமா வெற்றி உடனே கிடைத்துவிடும் தானே எனும் எண்ணம் நமக்குள் ஓடலாம் அதே ஹென்றி போர்ட் மறுபடியும் சொல்கிறார், மனதில் நினைத்ததை செயலில் காட்டும் பொழுது உங்களை அறியாமலே உங்களுக்குத் தேவையான ஆற்றல் பிறக்கும் ஆதலால் வெற்றியை அடைய நாம் முன்னெடுப்போம் மனது வைப்போம் வெற்றிக்கான எளிய வழிகள் என்னென்ன அடுத்த வாரம் சொல்கிறேன் ஆவலோடு காத்திருப்போம்.

-முனைவர் ம.இருதயராஜ், மனிதவள உயர் மேலாளர். சென்னை.

*கேள்விகளைக் கேட்க தொடர்பு கொள்க hr.iru2018@gmail.com

Leave a Reply to Jency Selvam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  1. இளைய தலைமுறைக்கு,
    நல்ல திசையை காட்டுகின்றன அருமையான பதிவு.

  2. Jency Selvam says:

    Super… Correctly said sir.