கலகலப்பு கஃபே – பாலிடிக்ஸ் கார்னர்

“என்ன மொசக்குட்டி… இப்பல்லாம் உன்னைய பார்க்கவே முடிய மாட்டிங்குது… எதாவது லவ்வு கிவ்வுன்னு மாட்டிக்கிட்டியா?”

“யோவ் சித்தப்பு… கடுப்ப கெளப்பாதய்யா… நானே நொந்து போயிருக்கேன்!”

“அப்ப கன்பார்மா லவ்வு தான்… லவ்வ சொல்லி புட்டுக்கிச்சா?”

“யோவ் சித்தப்பு… நீ இன்னும் உன்னோட காலத்துலயே இரு… இப்பல்லாம் ஒரு ஸ்மைலி போதும் லவ்வ சொல்ல… அதேபோல ஒரு ஸ்மைலி போதும் அதை ப்ரேக் அப் பண்ண… அப்டியே அடுத்த லவ்வுக்கு தாவிக்கிட்டே இருப்போம்… இன்ஸ்டா… ட்விட்டரு… ஸ்மூலுன்னு எக்கச்சக்கமா ஆப் இருக்கு… உங்கள மாதிரி ஒரு பொண்ணுகிட்ட லவ்வ சொல்லவே லவ் லெட்டர தப்புத்தப்பா எழுதி புக்ல வச்சு நீட்டி… முழக்கி… இதுல லவ் பெயிலியராம்ல!”

“சரிசரி… நா அந்தக்காலம் தான்… அதுக்காக ஓவரா கலாய்க்காத! அப்புறம் ஏந்தான் இந்த பக்கமே வரலை?”

“ஐ.பி.எல், மேட்ச் ஸ்டார்ட் ஆயிருச்சு தெரியும்ல… அதான் சாயங்காலமானா மேட்ச் பார்க்க உக்காந்துடுவேன்… உங்கூட பேசுறதுக்கு ஐ.பி.எல். மேட்சாவது நல்லா டைம்பாஸ் ஆகும்ல!”

“ஏலேய்… ஓவரா லந்த குடுக்காத! என்னைக்கு இருந்தாலும் சித்தப்பு கிட்ட தான் பேசுறதுக்கு வந்தாகணும்! அதுசரி, இன்னைக்குதான் சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச் இருக்குதுல்ல… பிறகு எதுக்கு எங்கூட பேசுறதுக்கு வந்த?”

“அவிங்க வர வர உன்னைய விட போரா விளையாடுறாய்ங்க சித்தப்பு! இதுவரைக்கும் மூணு மேட்ச் நடந்துடுச்சு… மூணுலயும் தோத்துட்டாய்ங்க!”

“அடக்கொடுமையே! மூணுலையும் தோத்துட்டாய்ங்களா? சி.எஸ்.கே. ஓபனர் கெய்க்வாட் செமயா அடிச்சு விளையாடுவானே… அப்டி விளையாடியுமா தோத்துடுச்சு?”

“அடிச்சு விளையாடுவானா? அவனால நாலாவது பாலையே தாண்ட முடியல! இதுவரைக்கும் மூணு மேட்சுலயும் நாலாவது பால்ல தான் கரெக்ட்டா அவுட்டாகியிருக்கான்!”

“ஆச்சர்யமா இருக்கே மொசக்குட்டி! கவலைப்படாத… இன்னைக்கு மேட்ச்ல பெருசா அடிக்கலைன்னாலும் நாலு பாலைத் தாண்டியும் விளையாடுவான்! நம்பிக்கையா இரு!”

“யோவ் நீ அவன பெருமையா சொல்றியா, கலாய்க்கிறியா?!”

“ரெண்டும் தான்! அதுசரி தோனி இப்பதான் கேப்டனா இல்லையே அடிச்சு விளையாடுவானே?”

“மொத ரெண்டு மேட்ச்ல ஓரளவுக்கு விளையாடுனாப்ல… ஆனா மூணாவது மேட்ச்ல டெஸ்ட் மேட்ச்னு நினைச்சு டிஃபன்ஸ் விளையாட ஆரம்பிச்சுட்டாப்ல! செம போர் சித்தப்பு!”

“எனக்கு முன்னயே தெரியும்டா மொசக்குட்டி! இந்த சி.எஸ்.கே.லாம் இப்டித்தான்டா… தோனிய வச்சு பெருசா பில்டப் பண்ணிட்டாய்ங்க… ஐ.பி.எல்னாலே நம்ம மும்பை இந்தியன்ஸ் தான்டா கிங்கு!”

“க்கும்… அதுக்கும் ஊதிட்டாய்ங்க சங்கு! அதுவும் மொத மூணு மேட்சும் தோத்துட்டு, சி.எஸ்.கேய விட கீழ இருக்குது!”

“அடப்பாவத்த! அப்ப ஐ.பி.எல்லே போர் தான்!”

“ஆமா சித்தப்பு… இப்பல்லாம் எவனும் அவங்கவங்க மாநிலத்து டீம் ஜெயிக்கணும்கறதுக்காக ஐ.பி.எல். பார்க்குறதுல்ல… ட்ரீம் 11ல பெட் கட்டத்தான் மேட்சே பார்க்குறது!”

“க்கும்… எல்லாமே சூதாட்டம் தான்டா… இதுக்கு பேசாம, பார்லிமென்ட் கூட்டத்தையாவது வேடிக்கை பார்க்கலாம் போல! அது சுவாரஸ்யமா போகுதாம்!”

“பார்லிமென்ட் கூட்டமா? அதுல அம்புட்டு பேரும் ஹிந்தில தான பேசுவாய்ங்க.. அது என்னத்த புரியப் போகுது?”

“அவங்க பேசுறதா முக்கியம்?!”

“என்ன சித்தப்பு பொடி வச்சு பேசுற?”

“ஆமான்டா… பார்லிமென்ட்ல உக்ரைன் – ரஷ்யா போரைப் பத்தி காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ரொம்ப சீரியஸா பேசிட்டு இருக்குறப்ப, அவருக்கு பின்னால இருக்குற பெஞ்ச்ல உக்காந்திருந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலேவும் அரட்டை அடிச்சுட்டு இருந்திருக்காங்க!”

“சசி தரூர் சும்மாவே உன்ன மாதிரி குஜால் பார்ட்டியாச்சே சித்தப்பு?!”

“ஆமான்டா… இப்போ அவர் பரூக் அப்துல்லா பேசுறப்ப இவங்க ரெண்டு பேரும் அரட்டை அடிச்சுக்கிட்டிருந்த வீடியோ சமூக வலைத்தளத்துல சுத்தவும் ஆளாளுக்கு அதை வச்சு மீம்ஸ் எழுத ஆரம்பிச்சுட்டாங்க!”

“பின்ன விட்டு வைப்பாங்களா?! ஆமா சித்தப்பு இப்பல்லாம் அண்ணாமலை பேட்டி குடுக்குறதையே பார்க்க முடியலையே!”

“க்கும் அவரே முடியாமத்தான இருக்காரு!”

“என்ன சித்தப்பு சொல்ற? அவருக்கென்ன ஆச்சு?”

“அவருக்கு ஒன்னும் ஆகல… ஆனா கட்சிக்குள்ள தான் அவர் மேல ஏகப்பட்ட கம்ப்ளைன்டு! ஏற்கனவே பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி ஒரு கூட்டத்துல பேசிட்டு இருக்குறப்ப அண்ணாமலை அங்க வரவும், துரைசாமியோட பேச்சை நிறுத்த சொல்லிட்டாங்க.. அவரு செம்ம கடுப்பாயிட்டாரு. “எனக்கு என்ன மரியாதை… இருங்க… எல்லாரும் வந்து முடிக்கட்டும், அப்புறமாவே நான் பேசுறேன்”ன்னு கடுப்படிச்சு பேசுன வீடியோவும் வைரலாயிடுச்சு!”

“அடக்கொடுமையே!”

“அதுமட்டுமில்ல சித்தப்பு… பாஜகல முருகன் தலைவரா இருந்தப்ப ஏகப்பட்ட பேரை சேர்ந்த்திருந்தாரு. அவரு சேர்த்த அத்தனை பேரையும் அண்ணாமலை மதிக்கிறதே இல்லையாம்… எல்லார்கிட்டயும் போலீஸ்காரர் மாதிரியே நடந்திருக்காரு… அதான் அவரப்பத்தி டெல்லியில வத்தி வச்சுட்டாங்க! அதனால அவருக்கு டெல்லியில கூப்பிட்டு டோஸ் விட்டிருக்காங்க!”

“அப்போ அண்ணாமலையும் அண்ணாமலை படத்துல ரஜினி மாதிரி இந்த நாளை டைரியில குறிச்சுக்கோன்னு டயலாக் விட்டாலும் விடுவாரா சித்தப்பு?!”

“க்கும்… சொல்லிப் பார்க்கட்டுமே… இந்த நாளைக் குறிச்சுக்கோன்னு அவரையே காலி பண்ணிடுவாங்க! பின்ன ஐபிஎஸ் அண்ணாமலை பீஸ் போன அண்ணாமலை ஆகிடுவாரு! ஹஹஹ!”

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….