தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – மனோகரா (1954)

தமிழில் சில சொற்கள் சேர்ந்தால் அவற்றுக்கு அதீத சக்தி வந்துவிடும். அப்படி ஒரு அதீத சக்தி மிகுந்த சொற்களால் ஆன ஒரு வசனம் “பொறுத்தது போதும் பொங்கி எழு”. இந்த நாலே சொற்கள் கூறினால் போதும் தமிழ் கலாச்சாரத்தில் புழு பூச்சிக்கு கூட ரத்தம் கொதிக்க துவங்கிவிடும். சினிமா தமிழ் மக்களின் வாழ்வில் எந்த அளவுக்கு ரத்தத்தில் கலந்துள்ளது என்பதற்கு இந்த ஒரு வசனம் போதும். அந்த அளவுக்கு தமிழ் மக்களின் வாழ்வில் அழுத்தமான தடத்தை உருவாக்கிய படம் “மனோகரா” .

1954ம் ஆண்டில் வெளியாகி 68 வருடங்களான பின்பும் இன்றும் இந்த படம் ரசிகர்களின் மனதில் மாணிக்கம் போல கட்டிக்கொண்டிருக்கிறதென்றால் அதற்கு காரணம் கோடை இடிமுழக்கம் போல கலைஞரின் வசனமும், கொட்டும் அருவி போல நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நடிப்பும் தான் காரணம்.

இரண்டு வருடங்களுக்கு முன் பராசக்தியின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்த அதே இரண்டு மகத்தான கலைஞர்கள் மனோகராவிலும் வெற்றி கூட்டணி அமைத்து தமிழ் ரசிகர்களுக்கு விருந்து வைத்தனர். மனோகராவிலோ இன்னும் கூடுதலாக, இவர்கள் இருவருக்கும் சளைக்காத இன்னொருவர் நடிப்பும் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. அது கண்ணாம்பா. அவர் நடிப்பு திரையிலிருந்து அக்னி துண்டங்களை ரசிகர்கள் மீது வாரி இறைத்தார் போன்ற ஒரு துடிப்பை உண்டாக்கியது என்றால் மிகையில்லை.


பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய புகழ்பெற்ற நாடகத்தை ஜூபிடர் பிக்சர்ஸ் முதலில் எடுக்க நினைத்து கே . ஆர் ராமசாமியை ஒப்பந்தம் செய்து , இயக்குனர் ஏ எஸ் ஏ சாமியை இயக்குனராகவும், இளங்கோவன் அவர்களை வசனகர்த்தவாகவும் ஒப்பந்தம் செய்து தயாரிக்க காத்திருந்தது. இதனிடையே பராசக்தியின் மிகப்பெரிய வெற்றி அவர்கள் திட்டத்தை முழுவதுமாக கலைத்து ஆடிவிட்டது. கே.அர் ராமசாமிக்கு பதில் சிவாஜி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரைத்தொடர்ந்து கலைஞர் அவர்கள் வசனகர்த்தவாகவும் , எல்.வி பிரசாத் இயக்குனராகவும் ஒப்பந்தம் செய்தனர் . இந்தியவின் முதல் பேசும் படமாக 1931ல் வெளியான ஆலம் அராவில் உதவி இயக்குநராகவும் ,நடிகராகவும் தன் திரை வாழ்வை துவக்கிய எல்.வி பிரசாத் இப்படத்தை இயக்கியிருந்தார் .

மனோகரா திரைப்படத்தின் கதை


கேசரிவர்மன் என்ற கலைஞன் தனது மனைவி வசந்தசேனையுடன் மன்னன் புருஷோத்தமனின் அவையில் இசை நிகழ்ச்சி நடத்த வருகிறான். அரசன் அவள் மீது காதல் கொள்கிறான். கணவனை ஒழித்து அரசனுடன் இருக்க வசந்தசேனை கேசரியின் பாலில் விஷம் கலக்கிறாள். கேசரி இறந்துவிடுகிறார், ஆனால் ஒரு முனிவரின் உதவியுடன் கண்ணுக்கு தெரியாத மனிதனாக திரும்புகிறார். பழிவாங்க முயல்கிறான். புருஷோத்தமன் ஏற்கனவே ராணி பத்மாவதியை மணந்து, மனோகரன் என்கிற ஒரு மகன் இருந்தபோதிலும், மன்னன் புருஷோத்தமன் வசந்தசேனையிடம் ஈர்க்கப்பட்டு அவளுடன் வாழத் தொடங்குகிறான்.பத்மாவதி மன்னன் மீது கோபமடைந்து, வசந்தசேனையைப் பிரியும் வரை அவனை மீண்டும் பார்க்க மாட்டேன் என்று சபதம் செய்தாள். கேசரியின் குழந்தையை கர்ப்பமாக இருக்கும் வசந்தசேனை, புருஷோத்தமனின் குழந்தை என்று நம்ப வைக்கிறார். பிறந்த குழந்தைக்கு வசந்தன் என்று பெயர். வருடங்கள் உருண்டோடியது, வசந்தசேனை ஒரேயடியாக புருஷோத்தமனை கவர்ந்துவிட்டாள், இது மனோகரனை எரிச்சலூட்டியது .


ஆனாலும் அவன் அம்மா பத்மாவதி அவனை தடுக்கிறாள். அவனிடம் தன்னை மீறி வசந்த சேனையை எதுவும் செய்யகூடாது என சத்தியம் வாங்கிக் கொள்கிறாள்
வசந்தசேனையும் ஒரு சதித்திட்டம் தீட்டி, பத்மாவதியையும் மனோகரன் மனைவி விஜயாவையும் பொய் வழக்குகளில் சிறையில் அடைக்கிறார். மனோகரனை மரண தண்டனைக்காக தேரில் ஏற்றிச் செல்லும்போது, ​​ வசந்த சேனையின் முதல் கணவன் கேசரி வர்மன் அவனைக் காப்பாற்றுகிறான். மனோகரன், அமைச்சர் சத்தியசீலர் மற்றும் ராஜபிரியன் ஆகியோரின் உதவியுடன், வைத்தியராக வேடமிட்டு மீண்டும் அரண்மனைக்குள் நுழைந்து வசந்தசேனையின் கீழ் வேலை செய்கிறார். ஒரு கட்டத்தில் மன்னர் புருஷோத்தமனையும் சிறையில் தள்ளுகிறள் வசந்த சேனை .. புருஷோத்தமன் தன் தவறுகளை உணர்ந்து வருந்துகிறான்.இதனிடையே மனோகரனின் மனைவி விஜயா சிறையில் ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். வசந்தசேனை குழந்தையை கோர்ட்டுக்கு கொண்டு வந்து கொல்லும்படி உத்தரவிடுகிறார்.

இதனிடையே மனோகரனின் மாறுவேடம் கலைந்துவிட அவனையும் சிறைபிடிக்கிறாள் வசந்த சேனை. மனோகரனின் குழந்தையை வசந்தசேனை கொல்ல உத்தரவிட்ட உடனே , குடும்பத்தின் மானத்தை மீட்டெடுக்க மனோகரனிடம் “பொறுத்தது போதும் பொங்கி எழு” என கட்டளையிடுகிறாள். அவன் சுவரில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தாலும், அவனது தாயின் வார்த்தைகள் கேட்டதும் உணர்ச்சி பீறிட்டு கோபம் கொப்பளிக்க சங்கிலிகளை உடைத்துக்கொண்டு கிளம்புகிறான் . சண்டை ஏற்படுகிறது. மனோகரன், சத்தியசீலர், ராஜபிரியன் மற்றும் அவர்களது படைகள் ராணியின் படையைத் தாக்க, எதிரிகள் அனைவரும் அழிக்கப்படுகிறார்கள் . புருஷோத்தமன் விடுதலையாகி குடும்பத்துடன் இணைகிறார்.

பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகத்திலிருந்து கச்சிதமான ஒரு வடிவத்தில் திரைக்கதை உருவாக்கி இறுதி காட்சியை சமசன் அண்ட் டிலைலா படத்தின் பாதிப்பில் மாற்றி எழுதியது மட்டுமல்லமால் அதற்கேற்றார் போல உணர்ச்சி தெறிக்கும் கூர்மையான வசனம் எழுதிய கலைஞரின் எழுத்தாளுமை இப்படத்தை மிகபெரிய வெற்றிக்கு இட்டுச்சென்றது என்றால் மிகையில்லை.இதில் சிவாஜி, கண்ணாம்பா நடிப்புக்கு அடுத்ததாய் அனைவரையும் வசீகரித்தவர் வசந்த சேனையாக நடித்த டி.ஆர் ராஜகுமாரி தான். வசந்த்சேனையின் கள்ளகாதலனாக வரும் உக்கிர சேனன், நடிகர் எஸ்.ஏ நடராஜன், மனோகரனின் நண்பர்களாக வரும் ராஜ பிரியன் மற்றும் எஸ்.எஸ்.ஆர் ராஜேந்திரன், வசந்த சேனையின் மகனாக காக்கா ராதா கிருஷ்ணன் ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பால் படத்தின் மிகபெரிய வெற்றிக்கு வழி வகுத்தனர்.

(தொடரும்)

– எழுத்தாளர். அஜயன் பாலா.

பின் குறிப்பு : ஆசிரியரின் தமிழ் சினிமா வரலாறு பாகம் ஒன்று 1916-1947 நாதன் பதிப்பகம் வெளியீடாக நூலாக வெளி வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து  இரண்டாம் பாகமாக இத்தொடர் 1948 துவங்கி தமிழ் சினிமாவின் முக்கிய வரலாற்றுத்தடங்களை விவரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.