தமிழ்நாட்டின் டிசைன் அப்படி : சாமிமலையும்.. சமத்துவமும்

அம்மாவும் அவரது தோழியும் ஊருக்கு கிளம்பியபோது, அரைக்கால் சட்டை போட்டிருந்த ஆண்பிள்ளையான நான்தான் அவர்களுக்குத் துணை. கும்பகோணம் பஸ்ஸில் ஏறினோம். “சாமிமலைக்குப் போறோம்டா” என்றார் அம்மாவின் தோழி. “ஆறுபடையில் ஒண்ணு‘’ என்றார் முருக பக்தரான அம்மா. எனக்கோ, முதன்முதலில் மலையைப் பார்க்கப் போறோம் என்பதில் ஆர்வம் அதிகமானது.

கும்பகோணத்திலிருந்து சாமிமலைக்குப் போய் சேர்ந்தபோது, கோவில் நடை சாத்திவிட்டார்கள். அம்மாவின் தோழி கொண்டு வந்திருந்த சுவையான கட்டுச்சோற்றைப் பிரித்து சாப்பிட்டோம். தண்ணீர் கூஜா கொண்டு வரவில்லை. அப்போது மினரல் வாட்டர் பாட்டில் கிடையாது. கோவில் பக்கத்தில் சர்பத் கடை வைத்திருந்தவர், சோடா-கலரோ, சர்பத்தோ வாங்கினால் இரண்டு டம்ளர் தண்ணீர் கிடைக்கும் என்று ஆஃபர் தந்தார். ஒரு சோடா வாங்கிக் கொண்டு, சாப்பிட்டு முடித்தோம்.

எப்போது நடை திறக்கும் என்று அம்மாவும் தோழியும் காத்திருந்தார்கள். எனக்கோ மலையைப் பார்க்கின்ற ஆவல். நடை திறந்தபோது, உள்ளே சென்றால், அங்கே இருந்தது படிக்கட்டுகள்தான். சமஸ்கிருதப் பெயர்களைக் கொண்ட தமிழ் வருஷக் கணக்குப்படி 60 படிகள் இருந்தன.

“போம்மா.. மலைன்னு சொல்லிக் கூட்டிட்டு வந்து படியில ஏற வச்சிட்டே” என்று என் ஏமாற்றத்தை அம்மாவிடம் காட்டினேன். அவரோ முருகனை தரிசிக்கும் ஆவலில் எதையும் காதில் வாங்கவில்லை. வீட்டுக்கு வந்ததும் அப்பாவிடம் என் ஏமாற்றத்தைச் சொன்னேன்.

“தஞ்சை மாவட்டத்துல ஏதுடா மலை?” என்றார். அவர் சொன்ன தஞ்சை மாவட்டம் இன்று 4 மாவட்டங்களாக நிர்வாகக்கூறு போடப்பட்டுள்ளது. வயல், வரப்பு, ஆறு, குளம் எனப் பசுமையும் குளுமையும் சூழ்ந்த டெல்டாவில் மலையே கிடையாது.

படிக்கட்டுகளை மலை என்று சொல்லி, முருகனையும் ஏமாற்றி உட்கார வைத்துவிட்டார்கள் சாமிமலையில்.

அரைக்கால் சட்டை வயதில், அம்மாவுடன் போனபோது விறுவிறுவெனப் படியேறினேன். அரை நூற்றாண்டு கடந்த வயதுடன் கடந்த பிப்ரவரியில் உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக சாமிமலை கோயிலுக்குச் சென்றபோது, அம்மன் சன்னதியில் நடந்த மணவிழாவைப் பார்த்துவிட்டுத் திரும்பினேன். படிக்கட்டு ஏற ஆசைதான் என்றாலும் அண்மைக்காலமாக உடற்கட்டு தோதாக இல்லை. ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

திருமண ஜோடிகள் மட்டும் படியேறிப் போய், உச்சியில் உள்ள முருகனைக் கும்பிட்டுவர, அவர்களின் உறவினர்கள் பலரும் கீழேயே காத்திருப்பதையும் கவனித்தேன்.

ரோப் கார் போன்ற வசதிகள் உருவாக்கினால் நன்றாக இருக்கும் என்று மனது யோசித்தது. மலையோ பாறையோ இல்லாமல் ரோப் கார் எப்படி?

இதனை சாமிமலையை உள்ளடக்கிய பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பேராசிரியர் ஜவாஹிருல்லாவும் அறிவார். அதனால், படிக்கட்டில் ஏறுவதற்கு சிரமப்படும் பக்தர்களின் வசதிக்காக மின்தூக்கி (லிஃப்ட்) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்.

பாபநாசம் தொகுதியில் உதயசூரியன் உதித்து தலைமுறை கடந்துவிட்டது. 13 ஆண்டுகளுக்குப் பின் தி.மு.க ஆளுங்கட்சியான 1989 தேர்தலில் பாபநாசம் தொகுதியின் கடைசி ரவுண்டில் ஆயிரம் ஓட்டில் சூரியனை முந்தியது மூப்பனாரின் ‘கை’. கலைஞரிடம் வெளிப்பட்டதோ புன்ன‘கை’.

அதன்பிறகு நடந்த தேர்தல்களில் கை, சைக்கிள், இரட்டை இலை ஆகியவற்றுக்கே சாதகமாக இருந்த நிலையில், இந்த முறை பேராசிரியர் ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியபோது, உடன்பிறப்புகள் ஜெர்க் ஆகினர். பேராசிரியர் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டார். உடன்பிறப்புகள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற்றார். தொகுதி மக்களின் தேவையை அறிந்து பணியாற்றி வருகிறார்.

அவரது மார்க்கப்படி உருவ வழிபாடு கூடாது. ஆனால், உருவங்களை வழிபடும் பெரும்பான்மை மதத்தினருக்கு வசதியான வழிகளை உருவாக்கித் தரவேண்டியது, தொகுதியின் அனைத்து மக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினராகிய பேராசிரியர் ஜவாஹிருல்லாவின் கடமை.

அதற்கான குரல் ஏப்ரல் 12 அன்று சட்டமன்றத்தில் வெளிப்பட்டது. ஏப்ரல் 14ல் ‘சமத்துவ நாள்’ கடைப்பிடிக்கப்படும் என சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வரால் அறிவிக்கப்பட்டது.இன்றும் என்றும் தமிழ்நாட்டின் டிசைன் அப்படித்தான்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…