கலகலப்பு கஃபே – பாலிடிக்ஸ் கார்னர்

“என்னடா மொசக்குட்டி… உனக்கு இன்னைக்கு காபியா டீயா?”

“காபியே போதும் சித்தப்பு… டீ குடிச்சாலே அரசியலாகுது!”

“டீ குடிச்சா அரசியலா? ஓ… நம்ம பிரதமர் டீ வியாபாரம் பண்ணி முன்னுக்கு வந்ததா சொல்வாங்களே… அந்த அரசியலா?”

“அதில்ல சித்தப்பு…”

“அப்போ நம்ம முன்னாள் சப்ஸ்ட்டிடியூட் முதல்வர் ஓ.பி.எஸ். டீக்கடை வைத்து முன்னேறியதா சொல்வாங்களே அதுவா?”

“அதுவுமில்ல சித்தப்பு! இது நம்ம கவர்னர் சம்பந்தப்பட்டது!”

“அட… நம்ம கவர்னரும் டீக்கடை நடத்தித்தான் முன்னுக்கு வந்தாரா என்ன? அவரு ஆபீசர்னுல்ல சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்!”

“அட… ஆமா சித்தப்பு… இது அவரோட கடந்த காலத்த பத்தி இல்ல… அவரு நடத்துன டீ பார்ட்டிய பத்துனது!”

“அட ஆமாம்பா… அவரு எதோ பார்ட்டி வச்சு பல பேரு கலந்துக்கலைன்னு பரபரப்பா பேசிட்டு இருக்காங்களே?”

“ஆமா சித்தப்பு… தமிழ் புத்தாண்டுக்காக கவர்னர் ரவி ஒரு டீ பார்ட்டிக்கு அழைப்பு விடுத்தார். இது வழக்கமா கவர்னர்கள் நடத்துறதுதான். இந்த சம்பிரதாய டீ பார்ட்டியை, மார்க்சிஸ்ட் கட்சி புறக்கணிக்கப்போறதா முதலில் அறிவிச்சாங்க… அடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மமக, காங்கிரஸ் கட்சியும் புறக்கணிக்கப்போறதா அறிவிச்சது. அதேபோல தமிழக அரசு சார்பில் ரெண்டு அமைச்சர்கள் கவர்னரைப் போயி சந்திச்சாங்க… சந்திப்புக்குப் பிறகு, நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் ஜனநாயக விரோதமாக தன்னிச்சையாக கவர்னர் நடந்துக்கறதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு தமிழக அரசின் அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ளப் போவதில்லைன்னு அறிவிச்சுட்டாங்க!”

“அட… அப்போ அம்புட்டு பேரும் மொத்தமா புறக்கணிச்சுட்டாங்களா?”

“அதான் அதிமுகவும், பாஜகவும் மட்டும் கலந்துகிட்டாங்களே… அப்டியே ஜி.கே.வாசனும் கலந்துக்கிட்டாரே… அதுமட்டுமில்லாம, பாஜக தலைவர் அண்ணாமலை, மற்ற கட்சிகள் கலந்துக்காததால டீ செலவு மிச்சம்னு கிண்டலா சொல்லியிருக்காரு!”

“இப்டியெல்லாம் நக்கலடிச்சிருக்காரா? அதுக்கு பதிலடி தராமலா விட்டாங்க?”

“விசிகலருந்து ஷாநவாஸ், டீ செலவு மட்டும்தான் தெரியுதா என்ன? பெட்ரோல் டீசல் விக்கிற விலையில காருக்கு பெட்ரோல் போட்ட செலவும் தான் மிச்சம்னு சொன்னாரு! அதோட நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்னும் ஒருபடி மேல போயி, இந்த பார்ட்டி நடத்துனதுக்கான செலவுக்கு தமிழக மக்களோட வரிப்பணத்தைத்தான் செலவு பண்றாங்க… டீ செலவு மிச்சமானதா இல்லையாங்கறது அதுக்கான பில் வரும்போது தெரியும்னு சொல்லீருக்கார்! ஏன்டா வாயக் கொடுத்தோம்னு ஆயிடுச்சு அண்ணாமலைக்கு!”

“ஆக, இந்த பார்ட்டிக்கு வந்தவங்க, ஒரு கிளாசுக்கு நாலு கிளாஸ் டீ குடிச்சாலும் குடிச்சிருப்பாங்க போல!”

“ஆமா சித்தப்பு… வீட்டுக்கு பார்சல் கூட எடுத்துட்டுப் போயிருக்கலாம்… யாரு கண்டா!”

“ஏன்டா மொசக்குட்டி… பீஸ்ட் படத்துக்கு எதிர்ப்பு வந்திருக்காமே?”

“ரெண்டு படம் ஹிட் குடுத்தத நம்பி அந்த டைரக்டருக்கு நடிகர் விஜய் கால்ஷீட் குடுத்திருக்காரு… ஆனா மனுஷன் சந்தோசத்துல என்ன பண்றதுன்னு தெரியாம குழம்பிப்போயி, விஜயகாந்தோட பழைய படங்களை காப்பியடிச்சு பண்ணீட்டாருங்கற மாதிரி படத்தை எடுத்துவச்சிருக்காரு! மசாலா தூக்கல்… லாஜிக் கம்மியா இருக்கு… அதோட பாகிஸ்தான் தீவிரவாதிகளையும் படத்துல சேர்த்திருக்காரு சித்தப்பு!”

“ஆக, இந்த டைரக்டரும் நம்ம மோடி மாதிரிதான் போல!”

“எதை வச்சி சொல்ற சித்தப்பு?”

“மோடியும் ஒவ்வொரு தேர்தல் வர்றப்பவும், ஆட்சியோட சிறப்பைப் பத்தி பேசாமல், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சவால் விட்டுதான் பேசி கூட்டத்துல கைத்தட்டல் வாங்குவாரு! அதேபோல, தன்னிடம் விஜய்க்கேத்த கதை இல்லாததால, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரா படம் பண்ணிட்டாரு போல தெரியுதே!”

“ஆமா சித்தப்பு… விஜய்க்கும் மோடியை போல இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக்காட்டி தான் படத்தை ஓட வைக்கணும்னு என்ன அவசியம்னு கேட்டு, பீஸ்ட்டு… ‘மோசமான அபீஸ்ட்டு’ன்னு விஜய்க்கு எதிரா இஸ்லாமிய அமைப்புகள் குரல் கொடுத்திருக்காங்க”

“ஏண்டா மொசக்குட்டி… இளையராஜான்னாலே சர்ச்சை தானா? இப்ப எதுக்கு திடீர்னு பல பேரு இளையராஜாவை எதிர்த்து கிளம்பியிருக்காங்க?”

“இளையராஜா நம்ம கிராமத்து இசைராஜான்னு தான் புகழ்ந்திட்டு இருக்கோம். ஆனால் அவரோட பேச்சும், செயல்பாடும்தான் அப்பப்ப கடுமையான சர்ச்சையாகிடுது… சமீபத்தில் அம்பேத்கரைப் பற்றிய ஒரு நூலுக்கு, அம்பேத்கரைப்போலவே மோடியும் சிந்தித்துச் செயல்படுவதாகச் சொல்லி இளையராஜா அணிந்துரை எழுதிக் கொடுத்திருக்கார். அப்டி எழுதுனதைத்தான் பலரும் விமர்சனம் செஞ்சிருக்காங்க!”

“ம்ம்ம் அதுசரி… இளையராஜாவுக்கு எத்தனையோ விருதுகள் கிடைச்சாலும், இன்னும் கிடைக்காத சில விருதுகள் இருக்குதுல்ல… அதையும் அவர் வாங்கினால்தான நிறைவு!”

“ஓ… நீங்க அப்டி வர்றிங்களா சித்தப்பு! அப்ப சரி… அப்ப சரி! ஹஹஹஹ!”

-புத்தன்

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….