கலகலப்பு கஃபே – பாலிடிக்ஸ் கார்னர்

“என்ன மொசக்குட்டி… வேர்த்து விறுவிறுக்க வர்ற… என்ன ஓடி வந்தியா?”

“இல்ல சித்தப்பு… வீட்டுல பவர் கட்… கொஞ்ச நேரம் கூட இருக்க முடியல… அதான் ஓடியாந்துட்டேன்…”

“வெயில் காலம் வந்தாலே பவர்கட் வந்துடுதே… என்னத்த இங்க ஆட்சி பண்றாங்க!”

“யோவ் சித்தப்பு… யாரை நீ திட்டுற? தமிழ்நாடு கவர்மென்ட்டையா?”

“பின்ன நம்மூர்ல கரன்டு கட்டானால் தமிழ்நாட்டு அரச திட்டாம கேரள கவர்மென்டையா திட்டுவாங்க?”

“ஆக்சுவலா நீ சென்ட்ரல் கவர்மென்ட்ட தான் சித்தப்பு திட்டணும்… அவங்க தான் இதுக்கெல்லாம் காரணம்..”

“ஏன்டா எது எதுக்குத்தான் சென்ட்ரல் கவர்மென்ட்ட குறை சொல்லணும்னு கணக்கு இல்லையா? கரன்ட கட் பண்ணுனாலும் அவனுங்களத்தான் திட்டணுமா?”

“யோவ் சித்தப்பு… மத்திய தொகுப்புலருந்து நமக்கு நிலக்கரி அனுப்புவாங்க… அத வச்சுத்தான் நம்ம அனல் மின் நிலையம் இயங்கும்… அவங்க அனுப்பாததால் உற்பத்தி பாதிக்குது… அவங்க தர வேண்டிய நிலக்கரிய கரெக்ட்டா கொடுக்காததால இந்த பற்றாக்குறை… அதனால பவர் கட்டாகுது… நமக்கு மட்டுமில்ல… பிரதமரோட குஜராத்துலயே இந்த நெலமை தான் சித்தப்பு!”

“ஓஹோ… குஜராத்துன்னதும் தான் ஒரு காமெடி மேட்டர் நினைவுக்கு வருது மொசக்குட்டி…”

“சொன்னா நாங்களும் சிரிச்சுப்போம்ல…”

“க்கும்… அந்த காமெடிக்கு உலகமே இந்தியாவப் பார்த்து சிரிக்குதாம்… முன்ன அமெரிக்க அதிபர் ட்ரம்ப், குஜராத்ல அகமதாபாத் வந்தப்ப ஒரு சுவரு கட்டுனாங்களே நினைவிருக்கா?”

“ஆமா சித்தப்பு… விளிம்பு நிலை மக்களோட வீடுகளை மறைக்கிறதுக்காகவே அவசர அவசரமா சுவர் எழுப்புனாய்ங்களே… அதான?”

“அதே தான்டா மொசக்குட்டி… இப்போ இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வந்திருக்காப்ல… அவரையும் அகமதாபாத்துக்கு கூட்டிட்டு போயிருக்காரு!”

“திரும்பவும் சுவரை எழுப்பிட்டாய்ங்களா சித்தப்பு?”

“இந்த தடவை பட்ஜெட் பத்தலையான்னு தெரியல… இல்லன்னா போரிஸ் ஜான்சனுக்கு இதுவே போதும்னு நினைச்சுட்டாய்ங்களான்னு தெரியல… வெறும் வேட்டித்துணிய மட்டும் நெட்டுக்கா ஜாயின்ட் பண்ணி தொங்க விட்டு மறைச்சிருக்காய்ங்கடா!”

“அடப்பாவத்த! நம்மூரு திருவிழாவுல பண்ற மாதிரியில்ல பண்ணியிருக்காய்ங்க போல! அந்த வேட்டியைப் பார்த்தாலே அந்தாளு நம்மள கேவலமா நினைச்சிருப்பாரே சித்தப்பு!”

“நாம கேவலப்படுறது என்ன புதுசாடா!”

“அதான சித்தப்பு! இப்ப பாரு… தேவையே இல்லாம பாக்யராஜ் பிரச்சனையில சிக்கி அசிங்கப்படுறத!”

“இதென்ன மெட்டர்டா? புதுசால்ல இருக்கு… ஏற்கனவே இளையராஜா தான பிரச்சனையில சிக்குனாரு…?”

“ஆமா சித்தப்பு… மோடிய ஆதரிச்சு பேசுனதுக்காக முன்ன இளையராஜாவ போட்டு சமூக வலைத்தளத்துல தாக்கிட்டு இருந்தாங்க… இப்ப என்னடான்னா நடிகர் பாக்யராஜ்… வான்ட்டடா வண்டியில ஏறியிருக்காரு சித்தப்பு!”

“அவரு என்னத்த சொன்னாருடா? அவரு எப்பவுமே சினிமாவுல சக்ஸசான ரைட்டர் ஆச்சே?”

“க்கும்… அதெல்லாம் ஒரு காலத்துல… இப்ப அவரோட ஸ்க்ரிப்ட் தான் அவருக்கே ஆப்பா அமைஞ்சிடுச்சு… அவருக்கும் பாஜக ரூட்டு போட்டு தூக்கியிருக்கானுங்க… அவங்க மேடையில மோடிய புகழ்ந்து பேசுனா… அவருக்கு எதாவது பதவி வாங்கித்தர்றதா பேசியிருக்காங்க போல… ஏற்கனவே திமுக, அதிமுகல சான்ஸ் கிடைக்காம பல காலமா வெயிட்டிங்லயே இருந்தாரு… அதான் ஒரு ரவுன்டு பிஜேபி மேடையில போயி பேசிப் பார்ப்போமேன்னு இறங்கியிருக்காரு!”

“அப்டி என்னத்த பேசிட்டாரு?”

“மோடிய விமர்சனம் பண்ற அம்புட்டு பேரும் குறை மாசத்துல பிறந்தவங்களாம்… அதுவும் வெறும் மூணே மூணு மாசத்துல பிறந்தவங்களாம்!”

“மூணு மாசத்துல உருவமே இருக்காதேடா! கை கால் கூட வந்திருக்காதே!”

“அதேதான் சித்தப்பு! அந்த அளவுக்கு கேவலமானவங்களாம்… கண்ணு… கை… கால்னு எதுமே இல்லாமப் பிறந்தவங்கன்னு கேவலமான ஒரு ஸ்க்ரிப்ட்ட எழுதிட்டு வந்து பேசுனாரு… அதான் எல்லாருமே செம காண்டாகிட்டாங்க… இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் தங்களுக்கு ஆகாதவங்கள குறை மாசத்துல பிறந்தவங்கன்னே கிண்டலடிச்சுட்டு இருப்பீங்கன்னு கடுமையா எதிர்ப்பு!”

“அதானடா!”

“உனக்கு மோடிய பிடிக்கும்னா புகழ்ந்துட்டு போ… அதுக்காக ஏன் அவரை எதிர்க்கறவங்களை இழிவா பேசுறேன்னு ஆளாளுக்கு கேள்வி கேக்கவும் அவரே மிரண்டு போயிட்டாரு! அன்னைக்கு சாயங்காலமே, நான் பேசுனதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்… ஊனமுற்றவங்களை நான் கிண்டல் பண்ணவேயில்ல… நான் மொத்தத்துல பாஜககாரனே இல்ல… எங்கிட்ட இருக்கறதெல்லாம் அண்ணா… கலைஞர்… எம்ஜியார்… தோழர் ஜீவா வழிவந்த திராவிட கம்யூனிச சிந்தனைகள் தான்னு படார்னு கால்ல விழுந்த மாதிரி பதறிப்போயி மன்னிப்பு கேட்டதால மனுஷனை மன்னிச்சு விட்டாங்க! இதுல ஒரு காமெடி வேற இருக்கு சித்தப்பு…”

“அதென்ன மொசக்குட்டி?”

“பாக்யராஜ் காலைல மோடியை எதிர்க்கிறவங்களை விமர்சித்து பேசியதை அப்டியே பாஜக காயத்ரி ரகுராம் ஷேர் பண்ணியிருந்துச்சு… அதை பெருமையா சொல்லுச்சு… பார்த்தால் அன்னைக்கு சாயங்காலமே க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் குடுத்துட்டாரு!”

“வழக்கமா அவரோட படத்துல தான ட்விஸ்ட் வைப்பாரு… அதை அரசியல்ல பாஜகவுக்கே வச்சுட்டாரா! ஹஹஹ!!”

-புத்தன்

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…