இறந்த பறவைகளை தேடி-ஸ்லோ பாய்சன்

Tuesday_Article

இதுவரை பல்வேறு பறவைகளின் இறப்பு சம்பவங்களுக்கு பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டன. ஆனால் ஒரே ஒரு காரணத்தினால் பல்வேறு இடங்களில், பல விதமான பறவைகள் இறந்து போயின. அவற்றின் முழுவிவரங்களை அறிய நான் பயணித்தேன். எங்கு, எதனால் போன்ற கேள்விகளுக்கு இனி வரும் தொடர்களில் பகிர்கிறேன். காரணத்தை மட்டும் இப்போதே சொல்லிவிடுகிறேன்.

பசுமையான பயிர்கள், பூத்து குலுங்கும் மரங்கள், பூக்களில் தேனை உறிஞ்ச மாறி மாறி பறந்த பூச்சிகளின் ரிங்கார ஒலிகள், அந்த பூச்சிகளை பிடித்து உண்ண வந்த பறவைகளின் பாடல்கள் இப்படி மகிழ்ச்சியாக இருந்தது அமெரிக்கா. நம்பமுடியவில்லை தான காலங்கள் கடந்தன, பயிர்களின் இலைகளில் பூச்சிகள் இல்லை, அதனால் துளைகளும் இல்லை, பறவைகளின் பாடல்களும் கேற்கவில்லை. பூச்சிகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை குறைத்து விட்டதாக விவசாயிகள் மகிழ்ச்சியுமடைந்தனர், அதனால் அமைதியானது சூழல் என நினைத்தனர்.

அதே போல் இந்தியாவிலும் முதன் முதலாக 1980களில் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட போது அனைவரும் ஒரு நல்ல மாற்றம் வரப்போவதாகவே கனவு கண்டனர்.

ஜுராசிக் படத்தில் டைனோசரை காட்சி படுத்த அனைத்து நிபுணர்களும் கலந்தாலோசிப்பார்கள். அதில் ஒருவரை தவிர அனைவரும் குழந்தைகளின் மனதை கவர்ந்து, பணம் சம்பாதிக்க யோசனைகளை அள்ளி வீசினார்கள். ஒரே ஒரு சுற்றுச்சூழல் ஆய்வாளர் மட்டும் “இயற்கை தன் வழியை கண்டுபுடிக்கும்” என கூறினார். அபொழுது யாருக்கும் புரியவில்லை. படத்தின் இறுதியில் கண்டிப்பாக அனைவருக்கும் புரிந்திருக்கும்.  

அதே தான் நம் வாழ்விலும் நிகழ்ந்து வருகிறது. அமெரிக்காவில் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ந்த அமைதியை ஒரு சிலர் மட்டும் கவனித்தனர், ஏதோ மாற்றங்களை உணர்ந்தனர், ஏன் என்ற கேள்வி எழுந்தது, விடைகளை தேடினர், ஓரளவுக்கு யூகித்து, ஆய்வுக்குட்படுத்தினர் ஆராச்சியாளர்கள். ஆய்வுகளின் முடிவு அதிர்ச்சி அளித்தது. ஸ்லோ பாய்சனின் ஒரு வகை. இதன் தயாரிப்புகளை தடுக்கவேண்டும் என்று கூறினார். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்பு ஆராய்ச்சியாளர் ரேச்சல் கார்சன் பல முறை நீதிமன்றங்களுக்கு சென்று போராடி 1960களில் DDT என்ற வேதிப்பொருளுக்கு (Slow Poison) தடை வாங்கினார்.

சமீபத்தில் செய்தித் தாள்களில் காலை “உங்கள் டைனிங் டேபிலில் விசம்“, உங்க டீ-யில் பூச்சிக்கொல்லியா”? போன்றவற்றை செய்திகளாக படித்திருக்கக் கூடும். குழந்தைகளுக்கு நாம் கூறும் பல அறிவுரைகளில் ஒன்று யராவது தெரியாத நபர்கள் உண்வுப்பண்டம் கொடுத்தால் வாங்கவே கூடாது, ஏனென்றால் அதில் மயக்கம் வரும் வேதிப்பொருட்கள் கலந்திருக்கும் என்பதால். ஆனால் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் அநேகமாக அனைத்து பொருட்களிலும் வேதிப்பொருட்கள் இருக்கின்றதே. கொஞ்சம் கொஞ்சமாக நம் உடம்பில் சேர்ந்து சில நாட்கள், மாதங்களுக்கு பிறகு காப்பாற்றிக்கொள்ள முடியாத மிகப்பெரிய உடல் நோய்களாக வெளிப்படுகின்றன அதனால தான் இது “ஸ்லோ பாய்சன்”.

அந்த ஸ்லோ பாய்சன் மலேரியா நோயை பரப்பிய கொசுக்களை கொல்ல கண்டுபுடித்த வேதிப்பொருள் DDT (dichloro-diphenyl-trichloroethane) உட்பட பல வேதிப்பொருட்கள் தான். கொசுக்களை அழிக்க தயாரித்த வேதிப்பொருட்கள் கொசுக்களை தவிற மனிதர்கள் உட்பட பல உயிரங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்றப்படுத்தியது. தற்போது 2022லும் மலேரியாவினால் பாதிக்கப்படும் குழந்தைகள் அதிகரித்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.உலக அளவில் 241 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது இதில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 77% இறந்தே விட்டனர். மொத்தம் 29 நாடுகள் மலேரியாவால் பாதிக்கப்பட்டத்தில் இந்தியாவில் மட்டும் 1.7% பாதிக்கப்பட்டு 1.2% இறந்துள்ளனர் என்ற வேதனைக்கு காரணத்தை நாம் எத்தனை பேர் யோசித்திருப்போம்.

அதுமட்டுமில்லாமல் நாம் பயிர்களில் தெளிக்கும் உயிர்க் கொல்லிகள் அந்த பயிர்களை உண்ணும் பூச்சிகளில் சேர்க்கிறது (Bioaccumulation), இதனால் பூச்சிகளை உண்ணும் பறவைகளுக்கு உணவுச்சங்கிலியின் மூலம் கடக்கும் பொழுது வளர்சிதை மாற்றங்கள் மூலம் அதன் வீரியம் அதிகரிக்கிறது, இரண்டு மடங்காக சேர்க்கிறது (Biomagnification), பறவைகளை கடந்து வேட்டையடிகளான கழுகு போன்ற பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதிகரிக்கிறது, விவசாய நிலங்களிலிருந்து வாய்க்கால் வழியாக நீர் நிலைகளுக்கு செல்லும் நீரில் கலக்கும் வேதிப்பொருட்கள் நீர்நிலைகளின் பூஞ்சைகள், மீன்கள், மீன் உண்ணும் பறவைகளை என அனைத்தும் அழிக்கிறது, இறுதியில் ஆரம்பித்த மனிதர்களையே வந்தடைகிறது.

இந்த ஸ்லோ பாய்சன் எதிர்காலத்தில் மொத்த உலகையும் இதே போல் அமைதியாக்கிவிடும், இறுதியில் மனிதர்களின் இனம் வாழ்வதும் கேள்விக்குறியாகிவிடும் என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்ததினால் Silent Spring என்ற புத்தகத்தின் மூலம் உலக மக்களை விழிப்படைய செய்தார் ரேச்சல் கார்சன். இதில் இந்தியர்கள் மட்டும் இன்னும் தூங்குவது போல நடித்துக்கொண்டிருப்பதால் விவசாயிகளின் இறப்பைக் கூட கண்டுகொள்வதில்லை.

இந்தியாவில் DDT 2020 வரையிலும், Endosulfan என்ற மற்றொரு உயிர்கொல்லி 2001 வரையிலும், தயாரிக்கப்பட்டும், பயன்படுத்தியும் வந்தனர். இது போன்ற இன்னும் இன்னும் பல உயிர்கொல்லிகள் இன்று வரை பயன்பாட்டில் இருக்கிறது. அதனால் தான் இன்று வரை இந்தியாவில் மட்டும் விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகரிக்கவே செய்கின்றன.

இந்தியாவில் இன்னும் தயாரிப்பில் இருக்கும் உயிர்க்கொல்லிகளினால் பறவைகளும் இறந்துகொண்டே இருக்கின்றன. எங்களுடைய நான்காண்டு ஆய்வுக்களங்களில் பல சம்பவங்களை பதிவு செய்துள்ளோம். அதில் நான் மட்டும் நேரடியாக விசாரிக்க பயணித்த அனுபவங்களை அடுத்த தொடர்களில் பகிர்கிறேன்.

பயணமும் காட்சியும் தொடரும்………

– முனைவர். வெ. கிருபாநந்தினி, பறவைகள் ஆராய்ச்சியாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *