இலங்கைக்கு கடனளித்து கைகொடுக்கும் இந்தியா..!

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இலங்கை பொருளாதார சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது. அதனை மேலும் அதிகப்படுத்தும் விதமாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் அமைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவிசெய்ய முன்வந்துள்ளது.
இலங்கைக்கு இந்திய மதிப்பில் 7500 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இருநாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்தியா கடனுதவி செய்துள்ளது.
இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச டெல்லி வந்துள்ள நிலையில் கடனுதவிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
முன்னதாக, இந்தியாவின் உதவியை நாடி அந்நாட்டு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது கூடுதலாக 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனுதவியை பசில் ராஜபக்ச கேட்டதாக தகவல் வெளியானது. இது தவிர மேலும் சில நிதியுதவிகளையும் அந்நாடு கோரியுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த உதவிகளை விடுவிப்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து இருந்தது. இந்தியா ஏற்னவே கடந்த மாதம் இலங்கைக்கு 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் கடனுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தொகையை கொண்டு இந்தியாவிடம் இலங்கை எரிபொருட்களை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்றைய ஒப்பந்தத்தின் படி இந்தியா அளிக்க உள்ள கடன் தொகையை கொண்டு உணவு, எரிபொருள், மருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.