பொள்ளாச்சி வழக்கை விசாரித்த டிஎஸ்பி வீட்டில் ரெய்டு!

jeyaraman

கடந்த 2019ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சிபிசிஐடி காவல் துறையினர்விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பில் 2019ம் ஆண்டு குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். பாதிக்கப்பட்ட 9 பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியை சேர்ந்த அருண்குமார் என்ற நபர் 9 ஆவது நபராக கைது செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன், பொள்ளாச்சியில் துணை ஆணையராக பணியாற்றி வரும் போது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இன்று திண்டுக்கல் அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புப் பிரிவு துறை டிஎஸ்பி நாகராஜ், ரூபா கீதாராணி தலைமையிலான போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *