ரூ. 250 கோடிக்கு அசையா சொத்து… ஐ.டி. ரெய்டில் சிக்கிய தேமுதிக பிரமுகர்!

IT Raid

கடலூர் மாவட்டம் நெய்வேலியை தலைமையிடமாக கொண்டு ஜெயப்பிரியா சிட் பண்ட்ஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனத்தை தேமுதிக பிரமுகரான ஜெயசங்கர் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிதி நிறுவனம் 51 கிளைகளுடன் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி திரையரங்குகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் என இந்த குழுமத்திற்கு பல தொழில்கள் உள்ளன.

இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து 16.12.2021 அன்று சென்னை, கோவை, நீலகிரி, கடலூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் போது, அந்த நிறுவனத்தின் முக்கிய பிரமுகர்களால் ரகசியமாக பராமரிக்கப்பட்டு வந்த கணக்குகள் அடங்கிய கிளவுட் சர்வர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்ததில், சிட்பண்டு மற்றும் முதலீடுகள் மூலம் ரொக்கமாக கிடைத்த வருமானத்தைக் குறைத்துக் காட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது. கணக்கில் வராத இந்தப் பணம் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யப்பட்டிருப்பதுடன் சுமார் ரூ.250 கோடி அளவுக்கு அசையா சொத்துக்களை வாங்கியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது ரூ.12 கோடிக்கும் அதிகமான ரொக்கம் கைப்பற்றப்பட்டிருப்பதுடன், விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *