காந்தியாரைக் கொன்ற கோட்சே – ஆப்தே பெயரில் பாரத ரத்னாவா? – கி.வீரமணி

காந்தியார் நினைவு நாளில் கோட்சே பெயரைக் குறிப்பிடக் கூடாது என்று கோவை காவல்துறையினர் தடை செய்வதா? காவல் துறையில் காலிகளின் ஊடுருவலா? குவாலியரில் கோட்சே – ஆப்தே பெயரில் பாரத ரத்னாவாம்? அகண்ட பாரதம் உருவாக்க வேண்டுமாம்! இதைக் கண்டித்து இன்று (5.2.2022) காலை11 மணியளவில் தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகத்தின் சார்பில் கரோனா பரவல் தடுப்பு விதி முறைகளைப் பின்பற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குவாலியரில் இந்து மகா சபைக் கூட்டத்தினர் கோட்சே – ஆப்தே ஆகியோர் பெயரில் “பாரத ரத்னா” பட்டம் வழங்குவோம் என பகிரங்கமாக விழா கொண்டாடி, நாட்டின் தந்தையென உலகோரால் மதிக்கப்பட்டவரான அண்ணல் காந்தியாரைக் கேவலப்படுத்தி “அகண்ட பாரதம்” என்ற பன்னாட்டு ரீதியில் பிரச்சினையை உண்டாக்கக் கூடிய விஷமப் பிரச்சாரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 5.2.2022 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 31.1.2022 அன்று அறிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி இன்று தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பெரியார் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் இதில் பங்கேற்று கண்டனம் தெரிவித்தனர்.
சென்னையில் திராவிடர் கழக பொருளாளர். வீகுமரேசன் அவர்கள் தலைமை உரையுடன் காலை 11 மணிக்கு சென்னை பெரியார் திடல் நுழைவு வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, மாநிலமகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, வெளியுறவுத் துறைச் செயலாளர் கோ. கருணாநிதி, தந்தை பெரியார் திராவிடர் கழக திருவள்ளூர் மாவட்டத்தலைவர் புழல் டி.பி. ஏழுமலை ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதவெறியை மாய்ப்போம்! மனிதநேயம் காப்போம்! மதவெறிக் கூட்டத்துக்கு பெரியார் மண்ணில் இடமில்லை! காந்தியாரைக் சுட்டுக் கொன்ற கோட்சே ஆப்தே பெயர்களில் பாரத ரத்னா விருதுகளா? ஒன்றிய அரசே! அனுமதிக்காதே! பயங்கரவாதிகள் பெயராலே பாரத ரத்னா விருதுகளா? கொலைகார கோட்சேவுக்கும், கொலைகார ஆப்தேவுக்கும் கொண்டாட்டமா? மதச்சார்பின்மையைக் காப்போம்! மதவெறியை மாய்ப்போம்! என ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் வரவேற்புரையாற் றினார். தென் சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி நன்றி கூறினார்.