சிதம்பரம் தீட்சிதர்கள் 20 பேர் மீது PCR சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டும், பெண் பக்தை ஒருவரிடம் தீட்சதர்கள் ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய சக தீட்சதரை தாக்கியதாக 3 தீட்சிதர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சாதியின் பெயரைக்கூறி பெண் பக்தை ஒருவரையும் ஆபாசமாக திட்டியதாக அந்த அடாவடி தீட்சதர்கள் மீது புகார் எழுந்துள்ளது, இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்றம்பலம் மேடை மீது நின்று சாமி தரிசனம் செய்ய சில குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனை தட்டிக்கேட்ட கணேஷ் என்ற தீட்சதருக்கும், பிற தீட்சதர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. அவரைத் தொடர்ந்து சிற்றம்பல மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய முயன்ற லட்சுமி என்கிற ஜெயசீலா என்பவரையும் தீட்சிதர்கள் சூழ்ந்துகொண்டு கீழே இறங்கும் படி சண்டையிட்டனர். அந்த பெண்ணுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தீட்சிதர்கள் சாதிப்பெயரை சொல்லி ஆபாசமாக திட்டினர்.
இதனையடுத்து சக தீட்சிதரான கணேஷ் என்பவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட ராஜா செல்வம் தீட்சிதர், சிவ செல்வம் தீட்சிதர் மற்றும் சபேஷ் தீட்சிதர் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜெயசீலா சிதம்பரம் நகர காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் சிதம்பரம் காவல் துறையினர் புகாரின் பேரில் விசாரணை செய்து வந்தனர். பெண் பக்தரின் புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல் துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.