உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் ஓவர்… அடுத்தது என்ன?

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 12,838 வார்டுகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 74 ஆயிரத்து 416 வேட்புமனுக்கள் பெறப்பட்ட நிலையில், பரீசிலனையின் போது 2 ஆயிரத்து 062 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 14 ஆயிரத்து 324 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர். தற்போதைய நிலவரப்படி ந57 ஆயிரத்து 600க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 218 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆளும் திமுக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ளது. அதிமுக சில சிறிய கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கிறது. பாஜக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றனர். எக்கசக்கமான சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலில் களம் கண்டுள்ளதால் பலமுனை போட்டி நிலவி வருகிறது.
வரும் 19-ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படடுள்ளது. மேலும், வாக்குப்பதிவு நடைபெறும் நாளான வரும் 19-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இன்று மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைகிறது.