ஜெயக்குமாருக்கு மீண்டும் ஒரு சிக்கல்… கலக்கத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ்!

சென்னை ராயபுரம் பகுதியில் 49-வது வார்டில் மக்கள் நேற்று வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைச் செலுத்திக் கொண்டிருந்தனர். ஆளுங்கட்சியினர் யாரும் கள்ள வாக்குகளைச் செலுத்தி விடக்கூடாது என்பதில் முனைப்புக் காட்டிய அதிமுகவினர், அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு அருகில் முகாமிட்டிருந்தனர். அப்போது அவர்கள், திமுகவைச் சேர்ந்த நடராஜ் என்பவரை ஏற்கெனவே வேறொரு வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு, கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி சுற்றிவளைத்தனர்.
இந்த தகவலறிந்து அந்த இடத்துக்கு விரைந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த நபரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர், அங்கிருந்த அதிமுக-வினரிடம் அந்த நபரின் கைகளைக் கட்டி காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறினார். அதையடுத்து, அதிமுக-வினர் அந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அதிமுக-வினர் அந்த நபரின் சட்டையைக் கழற்றி அவரை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்றனர்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் 40-க்கும் மேற்பட்டோர் மீது சட்ட விரோதமாகக் கூடி கலகம் செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல்துறை வழக்கு பதிவுசெய்தது. இதனையடுத்து இன்று இரவு ஜெயக்குமார் வசித்து வரும் பட்டினப்பாக்கம் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர், அவரை கைது செய்தனர். பின்னர், அவரை ஜார்ஜ் டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளி கிருஷ்ணா ஆனந்த் முன் ஆஜர்படுத்தி வரும் மார்ச் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில், பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்தனர்.
திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் ஜாமீன் கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை மீண்டும் ராயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, போலீசார் இரண்டாவது வழக்கில் ஜார்ஜ் டவுன் 16-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த, ஜார்ஜ் டவுன் 16-வது குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி தயாளன், ராயபுரத்தில் அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ராயபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கில், அவரை மார்ச் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.