மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவி முகாம்… எங்கு, எப்போது, என்னென்ன தேவை முழு விவரம் உள்ளே!

சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயதொழில் வங்கிக் கடன் பரிந்துரை முகாம் நடைபெற உள்ளது.
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், சுயதொழில் மூலம் வாழ்க்கை மேம்பாடு அடைவதற்கு உதவியாக, “சுயதொழில் வங்கி கடன் பரிந்துரை முகாம்” 10.03.2022 வியாழன் அன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை கிண்டியிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்க்கை மேம்பாட்டு சேவை மையத்தில் (NCSC-DA) நடைபெற உள்ளது.
இம்முகாமில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் –சுய தொழில் செய்வதற்கு மானியத்துடன் ரூ.25,000 முதல் ரூ.ஒரு லட்சம் வரை வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வட்டியில்லா கடன் வழங்க பரிந்துரை செய்யப்பட உள்ளது. மாற்றுத் திறனாளிகள் ஆவின் பாலகம் அமைப்பதற்கு ரூ.50,000 மானியம் வழங்க பரிந்துரை செய்யப்பட உள்ளது. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்க ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.
எனவே சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகம், யூ.டி.ஐ.டி. அட்டை, ஆகியவற்றின் இரண்டு நகல்களையும், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் சிறப்பு முகாமிற்கு கொண்டு வர வேண்டும். இந்த முகாமிற்கு நேரில் வந்து மாற்றுத் திறனாளிகள் பயன்பெற வேண்டுமென்று துணை இயக்குநர் சங்கீதா பற்குணன் கோரிக்கை விடுத்துள்ளார்.