வணிகர்களுக்கு இனிப்பான செய்தி… இனி 2 கோடி ரூபாய் வரை ஈஸியாக கடன்!

தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ரூ.12.02 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள துறையின் மூன்று புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில், குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் கடன் உத்தரவாத நிதியம் ஆகியவற்றிற்கு இடையே கணினிமயமாக்கப்பட்ட இணையதளம் தயாரிக்கும் பொருட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் கயிறு குழுமத்தின் தென்னை நார் உற்பத்திக் கூடம், காக்களூர் – மத்திய மின்பொருள் சோதனைக்கூடத்தில் எல்.இ.டி விளக்குகள் மற்றும் பொருத்திகளுக்கான பிரத்யேக சோதனைக்கூடம், விருத்தாச்சலம் – பீங்கான் தொழில் நுட்பக்கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்காக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி ஆகியவற்றை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்கள் உற்பத்தி அலகுகளுக்காக தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் (TNCGS) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு 40 இலட்சம் ரூபாய்க்கு குறைவான வங்கி கடன்களுக்கு 90 சதவிகித உத்தரவாதமும், 40 இலட்சம் ரூபாய்க்கு மேல் 2 கோடி ரூபாய் வரை உள்ள கடன்களுக்கு 80 சதவிகித உத்தரவாதமும் ஒன்றிய அரசின் குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்துடன் (CGTMSE) இணைந்து தமிழ்நாடு அரசு ஆறு மாதங்களுக்குள் வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த கடன் உத்தரவாத திட்டத்துடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விரிவான மதிப்பீட்டு திட்டமும் ஒருங்கிணைந்து வழங்கப்படும். இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இன்னும் 6 மாதத்தில் தொடங்கப்படும் வகையில் முழுவதுமாக கணினிமயமாக்கப்பட்ட இணையதளம் (Electronic platform) தயாரிக்கும் பொருட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் கடன் உத்தரவாத நிதியம் (CGTMSE) ஆகியவற்றிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *