விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு… முதல்வரிடம் இருந்து டிஜிபிக்கு பறந்த உத்தரவு!

அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விருதுநகரில் 22 வயது இளம் பெண்ணை காதலிப்பது போல் ஏமாற்றி, தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்த மிரட்டிய ஹரிஹரன் என்ற நபர், அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டு விடுவேன் எனக்கூறி மிரட்டி வந்துள்ளார். வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் தனது நண்பர்களுடன் தனிமையில் இருக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இந்த வன்கொடுமை விவகாரம் தொடர்ந்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் விருதுநகர் காவல்நிலையத்தில் அளித்த புகார் அளித்தார்.
இதனையடுத்து இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக மேலத் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர்களான ரைஸ்மில் உரிமையாளர் மகன் ஜூனத் அகமது (27), ஓட்டுநர் பிரவீன் (21), மற்றும் 9-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 4 பேர் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகளாக இருப்பதால் அவர்களை கையகப்படுத்தி இளைஞர் நீதிமன்றகுழுமம் முன்பாக ஆஜர் செய்து அவர்களின் உத்தரவுபடி கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட இளம்பெண் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் சமூக நலத்துறையின் ஆலோசனை அளிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடத்த காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா மற்றும் சரக துணைத்தலைவர் பொன்னி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.