காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து… இளைஞருக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கடந்த 2016ம் ஆண்டு இளைஞர் அரவிந்த்குமார் கத்தியால் குத்திய வழக்கு விசாரணை, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி.முகமது பாரூக், கைது செய்யப்பட்ட அரவிந்த்குமாருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராத தொகையில் 10 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார். காதலிக்க மறுக்கும் பெண்கள் தாக்கப்படும் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இதுபோன்ற சம்பவங்கள் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கும் வகையிலும், பெண்கள் முன்னேற்றத்துக்கு தடையை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

பெண்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும், இவற்றை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.