ஹஜ் பயண வழக்கு… இந்திய ஹஜ் கமிட்டிக்கு பறந்த உத்தரவு!

புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என இந்திய ஹஜ் கமிட்டிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சென்னையை மீண்டும் பட்டியலில் சேர்க்க கோரி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை, கொச்சி, ஹைதராபாத் உள்பட 21 இடங்கள் புறப்பாட்டு தலங்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதை 10 ஆக குறைத்து இந்திய ஹஜ் குழு அறிவித்தது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமானில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோர் கேரள மாநிலம் கொச்சிக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டி இருந்தார்.
இதனையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என இந்திய ஹஜ் கமிட்டிக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் வழக்கையும் முடித்து வைத்தது.