பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆவின் அதிகாரிகள் திடீர் ஆய்வு!

நெல்லை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்
ஒன்றியத்தில் ஆவின் விழிப்புக்குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
நெல்லை மாவட்ட கூட்டுறவு பால்உற்பத்தியாளர்கள் ஒன்றிய செயல்பாடுகள் குறித்து நெல்லை ஆவின் அலுவலகத்தில் சென்னை ஆவின் விழிப்புக்குழுவால் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 08.04.2022 மற்றும் 09.04.2022 ஆகிய நாட்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் போது நெல்லை ஆவின் பொது மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர். பால் பவுடர் இருப்பு சரிபார்க்கப்பட்டதில் இருப்புப் பதிவேடு முறையாக பராமரிக்கப்படவில்லை. பாலிதீன்பைகள் இருப்பு சரிபார்க்கப்பட்டதில், கழிவு செய்யப்பட வேண்டிய உபயோகப்படுத்த இயலாத பாலிதீன்பைகள் தனியே இருப்பு வைக்கப்படவில்லை. கழிவு செய்யப்பட வேண்டிய பாலிதீன்பைகள் உரிய நேரத்தில் விற்பனை செய்யப்படவில்லை. இதுதொடர்பான பதிவேடு பொறுப்பான அலுவலர்களால் பராமரிக்கப்படவில்லை. அதுபோன்று நெய் இருப்பு, புத்தக பதிவேட்டில் உள்ள இருப்புடன் உண்மை இருப்பு சரிபாக்கப்பட்டதில், 30 கிலோ இருப்பு, உண்மையான இருப்பை விடக்குறைவாக காணப்பட்டது.
இது தொடர்பாக பால்பவுடர் கிடங்கு பொறுப்பாளர் மாரியப்பன், இப்ராகிம்பாசில், மேலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் திவான் ஒளி, உதவி பொது மேலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடர ஆய்வுக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வருங்காலங்களில் இதுபோன்ற, நடவடிக்கைகள் காணப்படின் தொடர்புடைய அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.