மாரியப்பனை மகிழ்ச்சியில் ஆழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

MK Stalin

பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு குரூப் 1 பணிக்கான நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலி வழங்கினார்.

கடந்த 2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி, தங்கம் வென்று மாரியப்பன் தங்கவேலு அசத்தினார். இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மாரியப்பன் நிச்சயம் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 1.86 மீட்டர் உயரம் தாண்டி இரண்டாவது இடம் பிடித்த மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். ரியோ ஒலிம்பிகில் தங்கம் வென்ற போது மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை அறிவிக்கப்பட்டது. குரூப் 1 பணியும், நிதியும் அறிவிக்கப்பட்டது. இதில் மாரியப்பனுக்கு நிதி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்ட நிலையில், தனக்கு இதுவரை அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கப்படாதது குறித்து மாரியப்பன் கடந்த செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார். கட்டாயம் உனக்கு அரசு வேலை கொடுப்பேன் என மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.

அதன்படி இன்று மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார். தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பன் தங்கவேலுக்கு துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை பெற்றுக்கொண்ட மாரியப்பன் தங்கவேலு, குரூப் 1 பணியிடம் கொடுத்தது மகிழ்ச்சியளிப்பதாகவும், அரசு வேலை கொடுத்த முதல்வருக்கு நெகிழ்ச்சியுடனும் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *