#WeStandWithSuriya… சூர்யாவிற்கு குவியும் ஆதரவு… பதறும் பாமக!

நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த ஜெய்பீம் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் இந்திய திரையுலகில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இதுவரை எந்த தமிழ் படத்திற்கு கிடைக்காத அளவிற்கு ஐஎம்டிபி ரேட்டிங்கில் ஹாலிவுட் படமான ஷாஷ்வாங் ரிடெம்ப்ஷனையே பின்னுக்குத் தள்ளி ஜெய்பீம் திரைப்படம் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் ஜெய்பீம் படத்தில் தங்களது சமூகத்தை திட்டமிட்டு அவமதித்து விட்டதாக வன்னியர் சங்கத்தினர் கொதித்தெழுந்துள்ளனர்.

வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் சூர்யாவிற்கு கடிதம் மூலமாக தனது கண்டனங்களை தெரிவித்திருந்தார். படத்தில் காடுவெட்டி குருவை அவமதிக்கும் நோக்கத்துடன் காவல் அதிகாரிக்கும் குருமூர்த்தி என பெயர் வைத்ததாகவும், வன்னியர்களின் சின்னமான அக்னி கலசத்தை காலண்டரில் காட்சிப்படுத்தியதாகவும் கண்டனங்கள் எழுந்தது.

இதையடுத்து நேற்று மயிலாடுதுறையில் நடிகர் சூர்யாவின் வேல் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம் செய்தனர். அதோடு மயிலாடுதுறைக்கு சூர்யா வரும்போது அவரை தாக்கும் நபர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பாமக மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று பாமகவினர் போராட்டத்தால் இந்த படமும் நிறுத்தப்பட்டது.

தற்போது வன்னியர் சங்கம் சார்பில் ஜெய்பீம் பட தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் அமேசான் ப்ரைம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வன்னியர்களின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே சூர்யாவுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் விதமாக #WeStandWithSuriya என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதன் மூலமாக பாமகவின் மிரட்டலுக்கு எதிராகவும், சூர்யாவுக்கு ஆதரவாகவும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. மேலும் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் மெளனம் காக்கும் நடிகர் சங்கம் மற்றும் சக நடிகர்கள்,டெக்னீஷியன்களையும் நெட்டிசன்கள் சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *