73 வயதிலும் முனைவர் பட்டம் வென்று சாதித்து காட்டிய முதியவர் !

முனைவர் பட்டம் பெறும் முதியவர் கல்வி கற்க வயது தடையில்லை என நிரூபித்துள்ளார். 73 வயதில் முனைவர் பட்டத்தை பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கப்பன் .

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன். இவர் அப்பகுதியில் உள்ள தேவசம் போர்டு பள்ளியில் ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற அவர், தனது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் முந்திரி பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கல்வியின் மீது தணியாத ஆர்வமும் காந்தியக் கொள்கைகள் மீது மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்தார். காந்திய கொள்கைகளை தனது வாழ்க்கையிலும் கடைபிடித்து வந்துள்ளார். இந்தநிலையில் உயர்கல்வி பயின்று முனைவர் பட்டம் பெற வேண்டும் என்பது அவரது ஆசைகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. இதனையடுத்து முனைவர் பட்டத்திற்கான மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளார்.

குற்றாலம் பராசக்தி கல்லூரி பேராசிரியர் கனகாம்பாளை வழிநடத்துனராக கொண்டு தனது ஆய்வை துவக்கியுள்ளார். காந்திய கொள்கைகள் மீது தணியாத ஆர்வம் கொண்டிருந்ததால் காந்திய தத்துவம் இன்றைய பயங்கரவாத உலகில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்ற தலைப்பில் அவர் ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக ஆய்வு செய்த அவர் அதனை முடித்து தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் முனைவர் பட்டத்தை பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே எம்.ஏ (வரலாறு )எம்.எட்., எம்.பில் ஆகிய படிப்புகளை முடித்து உள்ளார். திருமணம் செய்து கொள்ளாத இவர் இறுதி நாள் வாழ்வின் முழுமையும் கல்வி கற்க வேண்டும் எனவும் காந்திய கொள்கைகளை பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *