கையில் சிலம்புடன் வந்த மநீம பெண் வேட்பாளர்… ஏன் தெரியுமா?

கண்ணகி போல் கையில் சிலம்புடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் கவனம் ஈர்த்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுமென தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு இறுதியாகி தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளதால், அ.தி.மு.க, காங்கிரஸ், மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சிகள், சுயேட்சைகள் விறுவிறுப்பாகவும், விதவிதமாகவும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதுரை மண்டலம் 4ல் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 78வது வார்டு கோவலன் நகரில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிடும் பி.இ எம்.பி.ஏ பட்டதாரியான மதுமிதா அசோகன் வேட்புமனு தாக்கல் செய்த விதம் கவனம் ஈர்த்துள்ளது. கண்ணகி போல் கையில் சிலம்புடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தவறிழைக்காத கோவலனுக்கு அநீதி இழைக்கப்பட்டதை போல், தற்போது தமிழ்நாடு மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளை தட்டிக்கேட்க தனக்கு வாய்ப்பளிக்கும் படி கையில் சிலம்புடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.