நீட் தேர்வு விவகாரம்: மாநிலங்களவையில் திமுக நோட்டீஸ்!

நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து விவாதித்து முடிவு செய்திட, சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் வரும் சனிக்கிழமை காலை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சியிலிருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க வருமாறு, பாரதீய ஜனதா கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவை செயலரிடம் திமுக எம்.பி. திருச்சி சிவா இந்த ஒத்திவைப்பு நோட்டீஸை வழங்கியுள்ளார். மாநிலங்களவை அலுவல் நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.