பாறை இடுக்கில் சிக்கிய இளைஞர் மீட்பு… முத்தமிட்டு நன்றி தெரிவித்த பாபு!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மழப்புழாவில் உள்ள குரும்பாச்சி என்ற மலைக்கு பாபு என்ற 23 வயது இளைஞர் தனது 3 நண்பர்களுடன் சென்றுள்ளார். மலையேற்றத்தின் போது நடுவழியில் கால் தவறியதில் பாபு உருண்டு விழுந்து, அதிர்ஷ்டவசமாக பாறை இடுக்கில் இருந்த சிறிய குகையில் சிக்கி கொண்டார். இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு நண்பர்கள் தகவல் கொடுத்தனர். அவரை மீட்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்தனர்.
ஆனால் அவர்களால் பாபு சிக்கியுள்ள இடத்தை அடையாளம் காண முடியவில்லை. இதை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடங்கியது. நீண்ட நேரத்திற்கு பின் பாபு சிக்கியுள்ள இடத்தை ஹெலிகாப்டர் மூலம் கண்டறிந்தனர். ஆனால் ஹெலிகாப்டர் மூலமாக இளைஞரை மீட்கும் முயற்சி தோல்வி அடைந்தது. இதனையடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்திய ராணுவத்திடம் உதவி கோரினார்.
இதனையடுத்து வெலிங்டன்னில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் விரைந்த மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் பாறை இடுக்கில் சிக்கியிருந்த பாபுவை பத்திரமாக மீட்டனர். கிட்டதட்ட 30 மணி நேரத்திற்கும் மேலாக உணவு, தண்ணீர் இன்றி தவித்து வந்த பாபு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தன்னை மீட்ட இந்திய ராணுவப்படையினருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த பாபு, ராணுவ வீரர்களை முத்தமிட்டு தான் உயிர் தப்பியதை மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.