இரவு நேர போக்குவரத்திற்கு தடை… மக்கள் கடும் எதிர்ப்பு!

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் தேசிய நெருஞ்சாலையில் நாளை முதல் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் அடிக்கடி வாகனங்கள் மோதி வனவிலங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வந்தது. இதனால் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சொக்க லிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 2019ம் ஆண்டில் இரவு நேரங்களில் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பால் தடையை நீக்கிக்கொண்ட நீதிமன்றம், சுமூக தீர்வு காண உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது சொக்கலிங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 2019ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை, பிப்ரவரி 10ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இரவு நேரத்தில் போக்குவரத்தை தடை செய்வதால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா எல்லைப்பகுதியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேங்கி நிற்பதாகவும், காலையில் கடும் வாகன போக்குவரத்து ஏற்படுவதால் விபத்துக்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.