திடீரென தேர்தல் தள்ளிவைப்பு… மாநில தேர்தல் ஆணையம் அதிரடி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைத்து மாநில தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் மாரடைப்பால் மரணித்த சம்பவம் பெருஞ்சோகத்தை உருவாக்கியுள்ளது.
மயிலாடுதுறை தருமபுரம் சாலையை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி அன்னதாட்சி (64). இவர், மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டார். இவர் தொண்டர்களுடன் தீவிரமாக வாக்குசேகரித்து வந்த நிலையில், சின்ன மாரியம்மன் கோவிலில் நடந்த குத்து விளக்கு பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது திடீரென அன்னதாட்சி மயங்கி விழுந்ததை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அன்னதாட்சி சாப்பிடாமல் விரதம் இருந்துள்ளார், மதியம் உணவு அருந்திய பிறகு விளக்கு பூஜையில் பங்கேற்றவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மயிலாடுதுறை நகராட்சியில் 19வது வார்டுக்கான தேர்தலை ஒத்திவைத்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் 19வது வார்டில் தேர்தல் பணிகள் முடிவுக்கு வந்துள்ளது.