சிரோன்மணியிடம் ரகசிய தகவல்களை பகிர்ந்த சித்ரா… சிக்கியது எப்படி?

யாரென்றே தெரியாத சாமியாருடன் 20 ஆண்டுகளாக வைத்திருந்த தொடர்புக்காக தேசிய பங்குச்சந்தையான என்எஸ்இ முன்னாள் தலைமைநிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணா செய்த காரியம் இந்திய பங்குச்சந்தையையும், அதன் பங்குதார்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணா தேசிய பங்கு சந்தையின் பொறுப்பிலிருந்து 2016-ம் ஆண்டு விலகினார். அதன் பின்னர் அவருடைய மெயிலை ஆய்வு செய்து பார்த்த செபிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், சித்ரா ராமகிருஷ்ணா தேசிய பங்கு சந்தையின் நிதி மற்றும் வணிக திட்டங்கள் குறித்து யாரோ நபருக்கு தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளது அம்பலமானது. இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது துறையில் தலைசிறந்து விளங்குவதற்காக இமயமலையில் உள்ள “சிரோன்மணி” என்ற சாமியாரிடம் ஆலோசனை பெற்று வந்ததாகவும், அதற்காக அவருடன் தகவல் பரிமாற்றம் நடத்தியதாகவும் சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சாமியார் என்ன சொல்கிறாரோ அதனை வைத்தே சித்ரா ராமகிருஷ்ணா தன் பதவிக்காலத்தின் இறுதிக்காலம் வரை செயல்பட்டிருக்கிறார் என்பதும், அந்த சாமியார்தான் தேசிய பங்கு சந்தையை நிர்வகித்து வந்தது என்ற தகவல்கள் செபி விசாரணை மூலம் வெளியாகி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் சித்ரா ராமகிருஷ்ணா அந்த சாமியாரை ஒருமுறைக்கூட பார்த்தது கிடையாதாம். அறிவுரைகள், ஆலோசனைகள் என அனைத்துமே ஆன்லைனில் தான் நடத்துள்ளதோ, தவிர அவர் யார், எப்படி இருப்பார் என்றெல்லாம் தனக்கு தெரியாது என சித்ரா ராமகிருஷ்ணா கைவிரித்துள்ளார்.
சாமியாரின் வழிகாட்டுதலின் படி என்எஸ்இ நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட ஆனந்த் சுப்ரமணியனுக்கு அடுத்தடுத்து 3 சம்பள உயர்வளித்து 4 கோடி வரை சம்பளம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. அத்தோடு வேறு யாருக்கு எல்லாம் பதவி உயர்வு தர வேண்டும், எவ்வளவு சம்பள உயர்வை நிர்ணயிக்கலாம் போன்ற நிர்வாக ரீதியிலான விஷயங்களையும் சிரோன்மணியிடம் கேட்டே முடிவெடுத்துள்ளார் சித்ரா ராமகிருஷ்ணா.
சாமியாரின் கைப்பாவையாக செயல்பட்ட சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 3 கோடி ரூபாய் அபராதமும், அவரது உதவியாளரான ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ரூ.2 கோடி அபராதமும் விதித்துள்ள செபி, இனி வரும் 3 ஆண்டுகளுக்கு பங்கு சந்தை தொடர்பான நடவடிக்கைகளில் அவர் ஈடுபடக் கூடாது எனவும், செபியிடம் பதிவு செய்துள்ள நிறுவனத்தில் இடைத்தரகராக பணிபுரிய கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.