நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விளையாடிய பணம்… ஒட்டுமொத்தம் எத்தனை கோடி தெரியுமா?

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னர் 31,030 வாக்குச்சாவடிகள் இருந்தன. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 6 வேட்பாளர்கள் இறந்துவிட்டனர். அந்த இடங்களில் தேர்தல் நடத்தவில்லை. இதே போல், யாருமே போட்டியிடாத இடங்கள் உள்ளிட்ட 295 இடங்களில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள போலீசார் முழுமையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதில் காவல்துறை உயர் அதிகாரிகள், போலீசார் உள்பட 97,882 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் 2,870 பேர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 12,321 பேர் உள்பட 1 லடசத்து 13 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணம், பரிசு பொருட்கள் பற்றி முழுவிவரத்தை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 1,147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 8 கோடியே 21 லட்சத்து 42 ஆயிரத்து 279 ரூ ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1 கோடியே 13 லட்சத்து 23 ஆயிரத்து 955 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 2 கோடியே 54 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் என மொத்தம், 11.89 கோடி மதிப்பிலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தால் பிடிபட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். பணம் பட்டுவாடா தொடர்பான புகார்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். கூகுள் பே மூலம் பணம் பட்டுவாடா நடைபெற்றிருந்தால், ஆதாரப்பூர்வமாக அதனை எடுத்துவிடலாம்”என்று தெரிவித்துள்ளார்.