சர்க்கார் பட பாணி டூ 105 வயசு பாட்டி வரை… கவனம் ஈர்த்த வாக்காளர்கள்!

இன்று நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவில், அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆகியோரை மிஞ்சும் வகையில் சுவாரஸ்யமாக சிலர் தங்களது ஜனநாயக கடமையாற்றியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அப்பாராவ் பகுதியை சேர்ந்த லியாகத் ஷெரிப் என்பவரது மகன் இம்தியாஸ் ஷெரிப் ஜனநாயக கடமையை நிறைவேற்றுதற்காக இன்று அமெரிக்காவில் இருந்து பறந்து வந்து வாக்களித்தார். சர்க்கார் பட பாணியில் தேர்தலுக்காக வெளிநாட்டில் இருந்து பறந்து வந்து இளைஞர் ஒருவர் வாக்களித்த சம்பவம் சோசியல் மீடியா, ஊடகங்களில் கவனம் ஈர்த்தது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திருப்பத்தூரின் இடையப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவர், ஜோலார்பேட்டை நகராட்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 8ஆவது வார்டு வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்பு கவச உடையுடன் வந்து வாக்களித்தார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 32 வயதான நபர் கவச உடையுடன் வந்து வாக்களித்தார். பாலக்கோட்டில் இருந்து சேலம் செல்லும் பேருந்து ஓட்டுநரான ஸ்ரீதர் என்பவர் பொம்மிடி அருகே பாதிவழியிலேயே பேருந்தை நிறுத்திவிட்டு, வாக்குச்சாவடிக்குச் சென்று தனது ஜனநாயக கடமையாற்றினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மகேந்திரன் என்பவர் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வந்தால் மட்டுமே வாக்களிப்பேன் என 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்களிக்காமல் இருந்து வந்துள்ளார். தற்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டேன் என திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், 45வது வயதில் முதன் முறையாக வாக்களித்து ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.
திண்டுக்கல்லில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற செவிலியரான அம்சா என்பவர் ஆம்புலன்ஸ் வாக்குச்சாவடிக்குச் சென்று, வாக்குச்சாவடிக்குள் ஸ்டிரெட்செரில் சென்று வாக்களித்து விட்டு திரும்பினார். திருப்பூர் பத்மாவதிபுரத்தைச் சேர்ந்த ஜானகி ராமன் என்ற இளைஞர், கால்முறிவுடன் ஆம்புலன்ஸ் மூலம் சென்று வாக்களித்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகராட்சிக்குட்பட்ட 13வது வார்டில் 102 வயதான ரங்கநாயகி பாட்டியும், ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் 18வது வார்டில் டானா என்ற 100 வயதான பாட்டியும், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகோஜனஹள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 13வது வார்டில் மங்கையம்மாள் என்ற 105 வயது பாட்டியுல் வாக்களித்தனர். சென்னை கோடம்பாக்கத்தில் 117வது வார்டுக்கான வாக்குச்சாவடியில் ரகுநாத் என்ற முதியவர் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் சென்று வாக்களித்தார்.