மனித நேயத்தால் கிடைத்த வீடு… சிறுவன் அப்துல் கலாமிடம் அரசாணை வழங்கிய முதல்வர்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவன் ஒருவர் மனித நேயம் பற்றி பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.
”எல்லாரும் உலகத்துல சமம். நம்ப யாரையும் புடிக்காதுன்னு முடிவு எடுக்க முடியாது. எல்லாரும் நம்பளை மாதிரிதான். சிலப்பேருக்கு கஷ்டம் இருக்கும். அந்தக் கஷ்டத்தை வெளில காட்ட மாட்டாங்க. உள்ளேயே வச்சிக்கிட்டு இருப்பாங்க. யாரையும் புடிக்காதுன்னு சொல்லாதீங்க. எல்லாரும் என்னை பல்லான்னுதான் கூப்பிடுவாங்க. நான் ஏன் யாரையும் புடிக்காதுன்னு சொல்லணும்? எல்லாரும் நண்பர்கள் மாதிரிதான்.
ஒற்றுமை இல்லாம ஏன் இருக்கணும். நம்ம நாடு ஒற்றுமை நாடுன்னு சொல்றோம். ஒற்றுமை இல்லாம இருந்துச்சினா எப்படி? இந்தக் கருத்து எல்லோர்கிட்டயும் போய் சேரணும். அப்போதான், மனித நேயம் போய் சேரணும். மனித நேயம் இருக்கணும்” என மனித நேயத்தையும் அன்பையும் வலியுறுத்திப் பேசி சிறுவனை சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்த்தனர்.
சென்னையை அடுத்த கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் அப்துல் கலாம். 7-ம் வகுப்பு படிக்கும் அவனது பேச்சியில் இருந்த முதிர்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே வியக்க வைத்தது. சிறுவனை குடும்பத்துடன் நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். தனது மகன் மதத்திற்கு எதிராக மனிதநேயம் பற்றி பேசியதால் தங்களை வீட்டு ஓனர் வீட்டை காலி செய்யும் படி சொல்லிவிட்டதாக அப்துல் கலாமின் அம்மா, அம்மா கண்ணீர் பேட்டி ஒன்றை தந்தார். அதில் வீட்டை திடீரென காலி செய்யச்சொன்னால் நாங்க எங்க போவோம் மனித நேயம் செத்து போச்சி என பேசியிருந்தார்.
மேலும் அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்றும், மாணவர் அப்துல் கலாமின் பெற்றோர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க வேண்டும் என, துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சிறுவனுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் சென்னை கே.கே. நகர் சிவலிங்கபுரத்தில் தமிழக அரசு வீடு வழங்கியுள்ளது. இதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுவன் அப்துல் கலாமிடம் வழங்கியுள்ளார்.