உக்ரைனுக்கு உதவ முன் வந்த ஸ்டார்லிங்க் நிறுவனம்

தொடர்ந்து நாலாவது நாளாக உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்து வருகிறது. போரின் முதல் கட்டமாக ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆயிரக்கணக்கிலான உக்ரைன் கணினிகள் மீது தீங்கிழைக்கும் மென்பொருள்கள் நிறுவப்பட்டதாக செய்திகள் வெளியாயின.உக்ரைன் அரசின் இணையதளங்கள் ரஷ்ய சைபர் படையால் முடக்கப்பட்டு இணையதள தகவல்களும் அழிக்கப்பட்டுவிட்டது. இத் தாக்குதலுக்கு பதிலடி தர உக்ரைன் ஹாக்கர்கள் களமிறங்கி உள்ளனர்.
இந்நிலையில் ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் இணைய சேவையை உக்ரைனில் செயல்படுத்த போவதாக எலான் மஸ்க் தெரிவித்தார் . இதுகுறித்து எலான் மஸ்க், “”ஸ்டார்லிங்க் சேவை இனி உக்ரைனில் செயலில் இருக்கும்” என்று ட்வீட் செய்துள்ளார்.உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் சேவைகளை வழங்குமாறு உக்ரேனிய Digital Transformation அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ் எலான் மஸ்க்கை வற்புறுத்திய 10 மணி நேரத்திற்குப் பிறகு மஸ்க் இந்த ட்வீட் செய்துள்ளர்.

இதுகுறித்து மைக்கைலோ ஃபெடோரோவ் ட்வீட் செய்தது, “நீங்கள் செவ்வாய் கிரகத்தை குடியேற்ற முயற்சிக்கும் போது — ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது! உங்கள் ராக்கெட்டுகள் விண்வெளியில் இருந்து வெற்றிகரமாக தரையிறங்கும் போது — ரஷ்ய ராக்கெட்டுகள் உக்ரேனிய குடிமக்களை தாக்குகின்றன! எனவே உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் நிலையங்களை வழங்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று கூறியிருந்தார்.