ரேஷன் கடை ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் பொதுமக்கள் நலன் கருதி இந்த நேர நிர்ணயத்தில் சில மாற்றங்களை தமிழக உணவுத்துறை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், துணை ஆணையர்கள் மற்றும் அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2018 மக்கள் சாசனத்தில் திருத்தங்களின்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் செயல்பட வேண்டும்.
ஆனால், இந்த வேலை நேரம் பெரும்பாலான ரேஷன் கடைகளில் பின்பற்றப்படுவதில்லை. இதனால் மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் குறித்த நேரத்தில் கடைகளை திறக்க உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும், வேலை நேரம் குறித்த விவரத்தை குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதுதொடர்பாக மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.