36 ஆண்டுகளாக நீடித்த வரலாற்றை உடைத்த பாஜக..!

உத்தரப்பிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான முடிவுகள் மார்ச் 10 அன்று வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி, இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உள்ளது. இதன் மூலம் ஆளும் அரசு 36 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதன் மூலம் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் அவர்களின் கூட்டணியில் உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைகிறது. தேர்தல் தேதி வெளியான நாள் முதலே உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்தன. பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ஆதரித்து மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதேபோல, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சற்று முன் வரை, இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான 202 தொகுதிகளை கடந்து பாஜக 240-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதே சூழலில் பாஜகவை எதிர்த்து கடும் போட்டியாக பார்க்கப்பட்ட சமாஜ்வாதி கட்சி 120 தொகுதிகளுக்கும் அதிகமாக முன்னிலை வகித்து வருகிறது.

முன்னதாக, தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் துறவியாக இருந்து மாநிலத்தின் முதல்வராக மாறிய யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக முதல்வராக ஆட்சி அமைப்பார் என தெரிவிக்கப்பட்டது. 1980-களில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது பாஜக தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக மேற்கொண்ட போதிலும் அக்கட்சிக்கு அது சாதகமாக அமையவில்லை.

கடந்த மாதம் பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கிய இந்த சட்டப் பேரவைத் தேர்தல் உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக நடைபெற்று மார்ச் 7 அன்று முடிவடைந்தது. அதற்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் பாஜக இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.