பிரதமர் மோடி கூறியது தவறு… பாஜகவை பதற வைத்த பிரசாந்த் கிஷோர்..!

உத்திரபிரதேசம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் 4 மாநிலங்களில் பாஜக தனது ஆட்சியை தக்க வைத்துள்ளது. பஞ்சாபில் ஆட்சியில் இருந்து வந்த காங்கிரஸ் தோல்வியை தழுவி ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. பாஜகவின் வெற்றி குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த நான்கு மாநிலங்களில் பெற்ற வெற்றி 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என பேசியுள்ளார்.

இந்நிலையில், அரசியல் வியூகங்கள் வகுத்து வழங்குவதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர் பிரதமர் மோடியின் கணிப்பு குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவுக்கான போர் 2024 இல் போராடி அப்போதே  முடிவு செய்யப்படுமே தவிர எந்த மாநில தேர்தல்களையும் வைத்து முடிவு செய்யப்படாது. இது பிரதமருக்கு  தெரியும், எனவே ஒரு தீர்க்கமான உளவியல் ஆதாயத்தை நிலைநாட்ட மாநில தேர்தல் முடிவுகளை முன்வைத்து உருவாக்கப்படும் புத்திசாலித்தனமான முயற்சி இது. இந்த தவறான சித்தரிப்பில் வீழ்ந்துவிடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜனவரி மாதம் அளித்த பேட்டியில் பேசிய பிரசாந்த் கிஷோர், இந்தச் சுற்றில் பாஜக அனைத்திலும் வெற்றி பெற்றாலும் கூட , 2024-ல் பாஜக தோல்வியைத் தழுவுவது சாத்தியமான விஷயம்தான். 2012-ல், உத்தரபிரதேசத்தில சமாஜ்வாதி கட்சி, உத்தரகண்ட், மணிப்பூரில் காங்கிரஸ், பஞ்சாப்பில் அகாலி தளம்  வெற்றி பெற்றது.ஆனால், இது 2014 இல் எதிரொலிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

மேலும், தென்னிந்தியாவிலும், பீகார், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களிலும் பலம் பெறாத நிலையில்தான் பாஜக உள்ளது, அவை கூட்டாக சுமார் 200 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளன. காங்கிரஸ் அல்லது கட்சிகளின் கூட்டணி தங்களை மறுசீரமைத்து, களத்தில் இறங்கினால் 250-260 தொகுதிகளில் வெல்ல முடியும் என தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி வெற்றி குறித்து பேசியிருப்பது உளவியல்ரீதியான வியூகமா அல்லது மக்கள் மனதில் உள்ள உண்மையான பிரதிபலிப்பு என்பதை 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தெரிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.