தமிழறிஞர்களை விருது வழங்கி கெளரவித்த தமிழக அரசு… குமரி ஆனந்தன், பாரதி பாஸ்கர், நாஞ்சில் சம்பத்திற்கு விருது!

MK Stalin

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களுக்கும் மற்றும் தமிழ் அமைப்பிற்கும் ஊடகத் துறைக்கும் என மொத்தம் 21 விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

இவ்விழாவில், தொழில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் .எஸ்.எஸ். சிவசங்கர், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் (பொறுப்பு) செ. சரவணன், இ.ஆ.ப., அரசு உயர் அலுவலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி விருது” என்ற புதிய விருது தோற்றுவிப்பு, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்கப்படும் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் இன்று தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், மறைந்த திரு.மு.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்குரிய 2022ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதினை அவரது மனைவி திருமதி வசந்தா அவர்களுக்கும், 2021ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது திரு.க. திருநாவுக்கரசு அவர்களுக்கும், 2021ஆம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது நீதியரசர் சந்துரு அவர்களுக்கும், 2021 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது திரு. நாஞ்சில் சம்பத் அவர்களுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது முனைவர் குமரிஅனந்தன் அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருது திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்களுக்கும் விருதுகளை வழங்கினார்.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்கும், கம்பர் விருது திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கும், சொல்லின் செல்வர் விருது திரு. சூர்யா சேவியர் அவர்களுக்கும், ஜி.யு.போப் விருது திரு.அ.சு.பன்னீர் செல்வன் அவர்களுக்கும், உமறுப்புலவர் விருது திரு. நா. மம்மது அவர்களுக்கும், இளங்கோவடிகள் விருது திரு. நெல்லை கண்ணன் அவர்களுக்கும், தேவநேயப்பாவாணர் விருது முனைவர் கு. அரசேந்திரன் அவர்களுக்கும், சிங்காரவேலர் விருது கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களுக்கும், மறைமலையடிகளார் விருது திரு. சுகி. சிவம் அவர்களுக்கும், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் இரா. சஞ்சீவிராயர் அவர்களுக்கும், அயோத்திதாசப் பண்டிதர் விருது திரு. ஞான. அலாய்சியஸ் அவர்களுக்கும், 2020-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது முனைவர் வ. தனலட்சுமி ஆகியோருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

மேலும், தந்தை பெரியார் விருது மற்றும் அண்ணல் அம்பேத்கர் விருது பெற்ற விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தலா ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக விருதுகள் வழங்கப்பட்டப் பிற விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக தலா இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், அத்துடன் அனைத்து விருதாளர்களுக்கும் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கி, பொன்னாடை அணிவித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறப்புச் செய்தார்.
மேலும், 2021 ஆம் ஆண்டிற்கான சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருதினை, உயிர்மை திங்களிதழுக்கு வழங்கிடும் வகையில் அதன் ஆசிரியர் திரு. எஸ். அப்துல்ஹமீது என்கிற மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு விருதுடன், விருதுத் தொகையாக இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், தகுதியுரையும், கேடயத்தையும் வழங்கி, பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் சிறப்பித்தார்.

அதேபோன்று 2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருதினை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கிடும் வகையில் அச்சங்கத்தின் தலைவர் திரு.பெ. இராஜேந்திரன், பொருளாளர் திரு. சைமன் ஞானமுத்து மற்றும் செயலவை உறுப்பினர் திரு. முனியாண்டி மருதன் ஆகியோருக்கு விருதுடன், விருதுத் தொகையான ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் தகுதியுரையும் கேடயத்தையும் வழங்கி, பொன்னாடைகளை அணிவித்து முதலமைச்சர் கெளரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.