நாட்டையே உலுக்கிய கொடூர வழக்கு… சிபிஐக்கு மாற்றிய நீதிமன்றம்!

குழந்தைகள் உட்பட 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை

சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 8 பேர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாயத்து தலைவர் பாதுஷேக் கொலை செய்யப்பட்ட ஆத்திரத்தில் அவரது ஆதரவாளர்கள், வீடுகளுக்கு தீ வைத்து 8 பேரை உயிரோடு எரித்துக் கொலை செய்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டம் ராம்புராட் பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் பாதுஷேக். கடந்த திங்களன்று 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் பாதுஷேக் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதனையடுத்து ராம்புராட்டில் நடந்த வன்முறையில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டன.இந்த கொடூர தாக்குதலில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். தற்போது அவர்களின் உடற்கூராய்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அவர்கள் அடித்து எரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்த விவகாரத்தில் உண்மையை மறைப்பதாக குற்றம்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பிர்பூம் கலவரம் கொடூரமானது எனவும், மேற்கு வங்க மாநிலம் கொடூரமான கலாச்சாரத்தின் பிடியில் இருப்பதாகவும் ஆளுநர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிர்பூம் கலவரம் எதிர்பாராத ஒன்று என்றும், கொலைகளை நியாயப்படுத்த விரும்பவில்லை என்றும், மாநிலத்தின் அனைத்து மக்களும் தம் மக்களே எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ள நிலையில் இந்த வழக்கானது தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பத்தில் தவறிழைத்தவர்கள் எந்தவித பாகுபாடுமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.