கருணாநிதி மகனாக இதை செய்வதில் மகிழ்ச்சி… நெகிழ்ந்து போன ஸ்டாலின்!

விழுப்புரம் மாவட்டம், கொழுவாரியில், ரூ.2.88 கோடி மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கொழுவாரி ஊராட்சியில் 2 கோடியே 88 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தினை திறந்து வைத்து, சமத்துவபுர வளாகத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலையினையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன், மஸ்தான், மாவட்ட ஆட்சியர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, ஒழிந்தியாப்பட்டு ஊராட்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, 10 ஆயிரத்து 722 பயனாளிகளுக்கு 42 கோடியே 69 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்: எந்தவிதப் பாகுபாடின்றி, எந்தவித வேறுபாடின்றி இந்தச் சமூகம் வாழவேண்டும் என்பதற்காகத்தான் குடியிருப்புகளாக நம்முடைய ஊர்கள் மாற வேண்டும் என்று பெரியார் கனவு கண்டார். ஒரு குறிப்பிட்ட சாதியினர், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொத்தமாக வாழ்வார்கள் என்ற நிலை இல்லாமல், அனைவரும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும், ஒற்றுமையோடு, ஒருமித்தக் கருத்தோடு அவர்கள் வாழவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் விரும்பினார். அந்த விருப்பத்தின் அடையாளம் தான் சமத்துவபுரங்களை கருணாநிதி உருவாக்கினார்.


1997-ஆம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டத்தை கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தொடங்கி வைத்தார். அனைத்துவிதமான முற்போக்கிற்குரிய புரட்சிகளுக்கும் நாட்டுக்கே முன்னோடியாக விளங்கக்கூடிய நம்முடைய தமிழ்நாட்டில்தான் இத்தகைய சமத்துவபுரங்கள் உருவாகியிருக்கிறது. இதுதான் சமத்துவத்தைப் பேசிக் கொண்டிருக்கக்கூடிய ‘திராவிட மாடல்!’. இதுதான் திராவிட மாடல். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ, ஒரு இடத்தில் சும்மா ஒரு அடையாளத்திற்காக நாம் கட்டவில்லை. தமிழ்நாடு முழுவதும் 238 சமத்துவபுரங்களை முதலைமைச்சர் கருணாநிதியால் அமைத்துக் கொடுத்தார். அதிலே ஒன்றுதான் விழுப்புரம் மாவட்டம் – வானூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த கொழுவாரி ஊராட்சியில் அமைக்கப்பட்ட இந்தச் சமத்துவபுரம்.

ஆகவே, இதை கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில்தான் கட்டவேண்டும் என்று முடிவு செய்து அதற்கான நிதியை ஒதுக்கி அந்தப் பணி தொடங்கியது. அதற்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதனால் பாதியிலேயே அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த சமத்துவபுரத்தை அவருடைய மகன் ஸ்டாலின் இன்றைக்கு வந்து உங்களிடத்திலே திறந்து வைத்திருக்கிறார். அதில் உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி. கலைஞருடைய கொள்கையை, அவரது சிந்தனைகளை, அவரது நினைவுகளை, அவரது கனவுகளை என்னுடைய மூச்சென முன்னெடுத்துச் செல்லக்கூடிய நிலையிலே நான் இருக்கிறேன் என்பதற்கு அடையாளமாகத்தான், இந்த சமத்துவபுரத்தை நான் திறந்து வைத்திருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.