பள்ளிக்கு அருகே நடந்த பயங்கரம்… களமிறங்கிய காவல்துறை!

பள்ளி அருகிலேயே குட்கா பொருள் விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள பள்ளிக்கு அருகிலேயே பான்மசாலா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் அவர்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது இந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள்.

கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த சோதனையானது நடைபெற்றது. சோதனையில் மூன்று கடைகளில் 30க்கும் மேற்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததுடன் 200க்கும் மேற்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக மூன்று நபர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் குட்கா பொருளை தடுப்பதற்காக சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பல அதிரடி சோதனைகளை நடத்தி பல்லாயிரக்கணக்கான போதை பொருட்களை பறிமுதல் செய்ததுடன் அபராதம் விதிக்கப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஆபரேஷன் கஞ்சா என்ற போதை ஒழிப்பு திட்டத்தை கொண்டு வந்தார் அதன் அடிப்படையில் அந்தந்த சரக துணை ஆணையர் தலைமையிலான காவல்துறையினர் தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனையில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தது மட்டுமில்லாமல் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பள்ளிக்கு அருகிலேயே பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறையினர் திடீர் சோதனையை நடத்தி குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததுடன் 3 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *