கலகலப்பு கஃபே – பாலிடிக்ஸ் கார்னர்

“என்னடா மொசக்குட்டி… என்ன வாயெல்லாம் பல்லா இருக்கு…. என்ன விஷயம்?”

“புதுசா ஒரு பேஸ்ட்டு வந்திருக்கு சித்தப்பு… அதைத் தேச்சதுலருந்து சிரிச்சுக்கிட்டே தான் இருக்கேன்… என்னையும் அறியாம!”

“அதென்னடா அப்டி ஒரு பேஸ்ட்டு?”

“அது ரொம்ப கோபப்படுறவங்களுக்காக மட்டுமே ஸ்பெஷலா கொண்டு வந்திருக்காங்க சித்தப்பு… அந்த பேஸ்ட்டால பல் தேய்க்க ஆரம்பிட்சுட்டா நாம கோபப்படுறத கன்ட்ரோல் பண்ணிடுமாம்… தொடர்ந்து தேய்ச்சுக்கிட்டே இருந்தா நாம சிரிச்சுக்கிட்டே இருப்போமாம்! அதைத்தான் இப்ப ஒரு வாரமா தேய்ச்சுக்கிட்டு இருக்கேன் சித்தப்பு! அதான் இந்த சிரிப்பு!”

“நம்ம முடியலையேடா மொசக்குட்டி! இப்டிலாமா பேஸ்ட் கொண்டுவந்திருக்காங்க?”

“யோவ் சித்தப்பு… நான் சொல்றதக் கேட்டா உனக்கு ஆச்சர்யமாத்தான இருக்கு? ஆனா பாரு, கோல்கேட் கம்பெனிக்காரங்க இப்ப புதுசா டயபடிக் பேஷன்டுகளுக்காகவே புதுசா ஒரு பேஸ்ட்ட கொண்டுவந்திருக்காங்க!”

“என்னது டயபடிக் பேஷன்டுகளுக்காக மட்டுமேவா?!”

“ஆமா சித்தப்பு… அதை வச்சு பல் தேய்ச்சா டயபடிக்கே கட்டுக்குள்ள இருக்குமாம்!”

“இதென்னடா குரளி வித்தையால்ல இருக்கு! அப்ப இனிமே காய்ச்சல் அடிக்கிறவங்களுக்கு… தலை வலி, காது வலி, வயித்து வலி வந்தவங்களுக்குன்னும் தனித்தனியா பேஸ்ட் கொண்டு வந்திருவாங்க போலயே!”

‘டெஃபனட்லி! அதை நக்கலடிக்கிறதுக்காகத்தான் சிரிக்கிறதுக்காக பேஸ்ட் வந்திருக்குன்னு சொன்னேன்!”

“அதுசரி… டெய்லி தங்க நிலவரம் மாதிரி…. இந்த வாரத்துல பிஜேபில எந்த விஐபிய இழுத்துச் சேர்த்திருக்காங்க? உனக்கு எதும் தெரியுமா மொசக்குட்டி?”

“சூர்யா இப்போ பிஜேபில சேர்ந்துட்டாரு சித்தப்பு!”

“என்னது சூர்யாவா? நம்ம நடிகர் சூர்யாவா? நம்பவே முடியலையே மொசக்குட்டி!”

“அய்யோ சித்தப்பா… அவரு நடிகர் சூர்யா இல்ல சித்தப்பு… இவரு திமுக சூர்யா!”

” திமுக சூர்யாவா? திமுகல சூர்யான்னா… இந்த சூர்யா சேவியர்னு திமுகவுக்கு சப்போர்ட்டா பேசிட்டு இருக்காரே அவரா? அவரு பக்கா திராவிட உணர்வாளராச்சே! அவரு எப்டி பிஜேபில சேருவாரு?”

“அய்யோ அவரும் இல்ல சித்தப்பு… இந்த சூர்யா… நம்ம திருச்சி சிவா எம்பியோட பையன் சூர்யா!”

“ஓ… திருச்சி சிவா எம்பிக்கு சூர்யான்னு ஒரு பையன் இருக்காரா? இதுவே இப்பதான் மொசக்குட்டி எனக்கு தெரியும்!”

“பார்த்தியா… இந்த சூர்யாவும்கூட அவங்க அப்பா கூட பத்து வருஷமா பேச்சுவார்த்தையே இல்லாம இருந்தாராம்… அதனால திமுகவுலயும் பெருசா எதும் வேலை செய்யலயாம்… இப்ப இவரு திருச்சி சிவாவோட பையன்கற லேபிளுக்காக அப்டியே பிஜேபில சேர்த்து பரபரப்பு காட்டுறாங்க!”

“இம்புட்டு தானாக்கும்! என்னத்தயோ… பிஜேபில சேர்ந்த பிறகாவது பொறுப்பா இருந்து பொழச்சா சரி!”

“க்கும்… என்னத்த… இப்ப இலங்கைல நடந்துட்டிருக்குற க்ளைமாக்ஸ் காட்சிகளை கேள்விப்பட்டியா சித்தப்பு?”

“ஆமாம்டா… ராஜபக்‌ஷேவோட பூர்வீக வீட்டையே கொளுத்திட்டாய்ங்களாமே?”

“ஆமா சித்தப்பு… இப்ப அந்தாளு உயிருக்கு பயந்துகிட்டு தலைமறைவா இருக்காப்ல!”

“வெளிநாட்டுக்கு தப்பி ஓடப்போறதால்ல சொல்லிட்டு இருந்தாங்க?”

“கூடிய விரைவில் அதான் நடக்கப்போகுது சித்தப்பு! நல்லா பார்த்தா 2009 மே மாசத்துலதான் ஈழப்போர் இறுதி யுத்தம் நடந்துச்சு… அப்ப இந்த மஹிந்த ராஜபக்‌ஷேவ சிங்களவங்க தூக்கி வச்சு கொண்டாடுனாங்க!”

“இப்ப 2022 மே மாசத்துல அதே சிங்களவங்க இந்த மஹிந்த ராஜபக்ஷேவ விரட்டி விரட்டி அடிக்கிறாங்க போல! இதுக்குத்தான் இன வெறியோட ஓவரா ஆடக்கூடாதுங்கறது…”

“இதுல மக்களுக்கு மெசேஜ் இருக்குது சித்தப்பு… ஆட்சியில இருக்குறவங்க மக்களை இன வெறியோட பிரிக்கிறப்பவே மக்கள் உஷாரா இருந்திருந்தால்… தமிழர்களுக்கு உரிய உரிமையை விட்டுக்கொடுத்திருந்தா இப்போ இவ்ளோ பெரிய சீரழிவே நடந்திருக்காதுன்னு சர்வதேசத்து மக்களும் பேசிக்கிறாங்க…”

“க்கும்… இனி அதைப் பார்த்தாவது இந்திய மக்கள் திருந்தணும்… இந்துக்கள் இந்துக்கள்னு பிரிவினை பேசறவங்களை நம்பி ஏமாந்தால் நாளைக்கு நமக்கும் இதே கதி தான்னு உணரணும்!”

“எங்க சித்தப்பு… இப்ப தமிழ்நாட்டுலயே இந்த மாதிரி பிரிவினையெல்லாம் வந்துடுச்சே… ஆம்பூர்ல பிரியாணி திருவிழான்னு நடந்தப்போறதா மாவட்ட கலெக்டர் அறிவிச்சிருக்காரு… அதுல என்னடான்னா பீஃப் பிரியாணி மட்டும் கிடையாதுன்னும் குறிப்பிட்டிருக்காரு…”

“அடக்கொடுமையே… சும்மாவா விட்டாங்க மொசக்குட்டி?”

“அதெப்படி சித்தப்பு? திராவிடர் கழகம்… விடுதலை சிறுத்தைகள்… இஸ்லாமிய அமைப்புகள்னு அத்தனை பேரும் கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சாங்க… எஸ்.சி., எஸ்.டி ஆணையமும் அந்த உணவுத் தீண்டாமையை கேள்வி கேட்கவும் இப்போ பிரியாணி திருவிழாவையே ஒத்திவச்சுட்டாங்க!”

“ஆஹா! கைக்கு எட்டுன பிரியாணி வாய்க்கு எட்டாம போயிடுச்சே! இப்ப சும்மா இருந்த எனக்கு பிரியாணி ஆசைய தூண்டி விட்டுட்ட… கவர்மென்ட் நடத்தலைன்ன என்ன… வா வா… இப்பவே ஒரு பீஃப் பிரியாணிய சாப்பிட்டாத்தான் மனசு ஆறும்! ஹஹஹஹ!!

-புத்தன்

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…