இறந்த பறவைகளை தேடி – முதல் விமானப் பயணம்

இன்றைக்கு நாம் பார்க்கப்போகிற இடம் சாம்பார் உப்பு நீர்‌ ஏரி. இது ராஜஸ்தானில் பிரபலமான தார் பாலைவனத்திலிருந்து கிட்டத்தட்ட 600 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜெய்ப்பூர் நகருக்கு தென்மேற்கே 80 கிலோ மீட்டர் தொலைவிலும், உள்ள சாம்பார் லேக் டவுனில் (Sambhar Lake Town) அமைந்துள்ளது. மந்தா, ரூபன்கர், காரி, கண்டேலா, மேத்தா மற்றும் சமோத் ஆகிய ஆறு ஆறுகளிலிருந்து வரும் தண்ணீர் 5,700 சதுர கிமீ நீர்ப்பிடிப்புப் பகுதியை கொண்டுள்ள சாம்பார் உப்பு ஏரியை நிரப்புகிறது.  


 உப்பு நீர் ஒரு குறிப்பிட்ட செறிவை அடைந்த பிறகு, மேற்குப் பக்கத்திலிருந்து கிழக்குப் பகுதிக்கு 5.1 கிமீ நீளமுள்ள மணற்கற்களாலான அணையை திறந்து தண்ணீர் குளங்களுக்கு அனுப்பபடுகிறது. அணையின் கிழக்கே 80 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட உப்பு ஆவியாதல் குளங்கள் உள்ளன. அங்கு ஆயிரம் ஆண்டுகளாக உப்பு விவசாயம் செய்யப்படுகிறது. உப்பு ஆவியாதல் குளங்கள், உப்பு நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள் மற்றும் உப்புத் தொட்டிகள் என நான்கு பிரிவாக குறுகிய முகடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

அணையின் கிழக்கே சாம்பார் லேக் சிட்டியிலிருந்து (Sambar Lake City) ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இரயில் பாதை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மொத்த உப்பு உற்பத்தியில்  9% அதாவது 196,000 டன் சுத்தமான உப்பு இந்த ஏரியிலிருந்து நமக்கு கிடைக்கிறது. மாநில அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் சால்ட்ஸ் லிமிடெட் உப்பை உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் தனியார் நிறுவனங்களோ ஆயிரக்கணக்கான சட்ட விரோத ஆழ்துளை கிணறுகளின் மூலம் உற்பத்தி செய்கின்றனர். இது  உப்பு ஏரியின் சூழலுக்கு கடுமையான தீங்கு விளைவிக்கிறது.

இந்த பாதிக்கபட்ட நிலையிலும் கூட இந்த ஏரி 100க்கும் மேற்பட்ட உள்ளூர் பறவை இனங்களுக்கு பயன்படுவதோடு மட்டுமில்லாமல் வட ஆசியா மற்றும் சைபீரியாவில் இருந்து வலசை வரும் 50 க்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்கும் இடம், உணவு அளிக்கிறது. இங்குள்ள மிதவை உயிரனங்கள், பாசிகள் மற்றும் பாக்டீரியாக்கள் பறவைகளுக்கு உணவாகின்றன. பறவைகளின் எச்சம் இன்னும் ஏரியை வளமாக்குகிறது. இதனால் பல்லுயிர்ச்சமநிலை ஏற்பட்டு உணவுச் சங்கிலி சீராக நடைபெறுகிறது. 


இத்தகைய ஏரியை தொடர்ந்து நல்ல நிலையை தக்க வைத்துக்கொள்ள ராம்சார் குளங்கள் பாதுகாப்பு என்ற அமைப்பிற்க்குள் 1990 ஆம் ஆண்டு அரசு இணைத்துள்ளது. Ramsar Convention என்பது உலக நாடுகளில் உள்ள ஈரநிலங்களை பாதுகாக்க ஏற்படுத்திய அமைப்பு. இதனுள் இருக்கும் ஈரநிலங்கள் சில சட்ட விதிகளுக்கு உட்பட்டது.


இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஏரியில் தான் யாரும் எதிர்பார்க்காத நிகழ்வாக நவம்பர் 2019 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 20,000 க்கும் மேற்பட்ட வலசை பறவைகள் மர்மமான முறையில் இறந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த அதிர்ச்சியான செய்தியை தெரியப்படுத்த ராஜஸ்தான் வனத்துறையினர் எங்களை தொர்புகொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஆனைக்கட்டியில் மழை காரணமாக மினசாரம் மற்றும் எந்த விதமான தொலைத்தொடர்பும் இல்லாமல் இருந்தோம். எங்களுக்கு தகவல் கிடைக்க இரண்டு நாள் ஆனது. ஆனால் இன்னமும் பறவைகள் இறந்து கொண்டிருந்தன. தகவல் வந்த அந்த நிமிடத்திருந்து எனக்கு திக் திக் நொடிகளாகவே  கடந்தன. 

தகவல் வந்ததே தாமதம், இதில் ரயில் பயணம் செய்தால் ஆறாவது நாள்‌ தான் சம்பவ இடத்திற்க்கு செல்ல முடியும் அதற்குள்‌ பறவைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துவிடும் என்பதால் விரைவாக சென்று காரணங்களை கண்டறிந்து பறவைகளின் இறப்பை தடுக்க முயற்சிக்கலாம் என்பதால் விமானத்தில் செல்ல வேண்டிய நிலை, தகவல் கிடைத்த இரவும், அடுத்த நாள் காலை ஜெய்ப்பூர் செல்லும் விமானங்கள் இல்லை. மூன்றாம் நாள் மதிய விமானம் டிக்கெட் கிடைத்தது. கள ஆய்வுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இருளில் பேக் செய்தேன். 


இதில் இன்னொரு செய்தி நான் இதுவரை விமானத்தில் பயணம் செய்ததே இல்லை. பொதுவாகவே பேருந்தில் சென்றால் கூட நாங்கள் பயன்படுத்தும் உடல் கூறு ஆய்வுகளுக்கு  தேவையான பொருட்களுக்கு அனுமதி கடிதம் தேவைப்படும் இதில் விமானத்தில் என்றால் சொல்லவே வேண்டாம், எனக்கு கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. மூன்றாம் நாள் மதியம் கோவை விமான நிலையத்திலிருந்து பதற்றத்துடன் ஜெய்ப்பூர் வனத்துறை அதிகாரிக்கு அழைத்து “Hello sir Its me Kirubhanadhini from sacon” என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்தேன்.  அவர் “நான் தமிழ் தான் தமிழையே பேசுங்க” என்று சொன்னதும் காதில் தேன் பாய்ந்தது, பதட்டமும் சற்று குறைந்தது. மாலை 7 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடைந்தேன்.  ஜெய்ப்பூரில் களப்பணியிலிருந்த எங்க ஆராய்ச்சி நிலைய மாணவர்களுக்கு எனது விஞ்ஞானி முன்னரே தகவல் கூறியிருந்தமையால் அவர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர், அவர்களுடன் வனத்துறை தங்கும் விடுதிக்குச் சென்றோம். என்னுடைய விமான பயணம் பற்றிய பதற்றம் முடிந்தது ஆனால் மூன்றாவது நாளாக இன்னமும் பறவைகள் இறந்துகொண்டேயிருந்தன.   

பயணமும் காட்சியும் தொடரும்……….

– முனைவர். வெ. கிருபாநந்தினி, பறவைகள் ஆராய்ச்சியாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *