தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு (1947-1977) : சிறுவன் கணேசனை சிவாஜி எனும் கலைஞனாக்க அடித்தளமிட்ட அனுபவங்கள்.

Shivaji_Spl_Article_2

எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடகக் குழுவில் நடிப்பு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த சிறுவன் கணேசமூர்த்தி ஊரை விட்டு வந்து ஐந்து வருடம் ஆகிவிட்டது . இந்த நிலையில், அப்போது குழுவில் நடிகராக இருந்த தன் ஊரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் பிற்பாடு (காக்கா ராதாகிருஷ்ணன் என அறியப்பட்டவர்) ஊருக்குப் போய்விட்டு திரும்ப, அவரிடம் ஆவலுடன் குடும்ப நலன் பற்றி விசாரிக்க காக்கா ராதாகிருஷ்ணன் சொன்ன தகவல் கேட்டு சிறுவன் கணேசமூர்த்தி அதிர்ந்தான். காரணம் அது ஒரு இறப்பு சேதி அதுவும் இறந்தது கணேசனின் மூத்த அண்ணன் ஞானசம்பந்தன்.

தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த கணேசன், இனியும் அங்கு இருக்க முடியாது என சண்டை போட்டு ஐந்து வருடங்களுக்குப் பின் திருச்சி சங்கிலியாண்டபுரம் வீட்டுக்கு சென்றார். துக்கத்தில் பங்கெடுக்க சென்ற அவருக்கு இன்ப அதிர்ச்சியும் காத்திருந்தது. ஆம் அப்போது தான், தனக்கு சண்முகம் எனும் தம்பியும், பத்மாவதி எனும் தங்கையும் புதிய உறவுகளாக கிடைத்திருப்பதை அறிந்தார். இந்த ஐந்து வருட இடைவெளியில் சின்னய்யாவுக்கும் இராஜாமணிக்கும் அவர்கள் பிறந்து வளர்ந்திருந்தனர்.

அதன் பிறகு திரும்ப நாடகக்குழு எனும் சிறை வாழ்க்கைக்குள் செல்ல விரும்பவில்லை. ராஜாமணி அம்மாவும் மகனை விடவில்லை. ஆனாலும் ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா?, கணேசனுக்கு திரும்ப அரிதாரம் பூச வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஆனால் யாரிடம் போவது திரும்ப போனால் பொன்னுசாமி வாத்தியார் சேர்த்துக்கொள்வாரா? என்று சந்தேகம்.

ஆனால் தகுதியும் திறமையும் ஒருவரிடம் இருப்பது கலையுலகில் தெரிந்துவிட்டால், அவன் கவலைப்பட தேவையில்லை வாய்ப்புகள் ஒருநாள் வாசல் தேடி வரும் என்பதற்கு சிவாஜியாக பின்னாளில் அறியப்பட்ட கணேசமூர்த்தியின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம் . அவரைத்தேடி சரஸ்வதியே வந்தார், ஆம் அன்று சரஸ்வதி நாடக சபா எனும் குழுவை நடத்தி வந்த எம்.ஆர்.ராதா தான் சிவாஜியை தேடி வந்து திரும்ப நாடகத்தில் நடிக்க அழைத்தார்.

அக்காலத்தில் எம்.ஆர்.ராதா நாடக உலகின் சூப்பர் ஸ்டார், நாடக மேடையில் மோட்டார் பைக்கை ஓட்டி வந்து ஸ்டாண்ட்கள் அடிப்பார் கீழே பார்வையாளர்களிடம் விசில் பறக்கும். அவருக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருந்தது. அதனால் அவர் தனியாகவே ஒரு குழுவை வாங்கி நடத்தி வரும் அளவுக்கு முன்னேறினார்.

அப்படி அவர் வாங்கிய சரஸ்வதி நாடகக் குழுவில் பெண் வேடமிட சரியான ஆட்கள் கிடைக்கவில்லை. அக்காலத்தில் பெண் வேடம் செய்ய பெண்கள் அதிகம் வரததால் ஸ்திரீபார்ட்டை செய்வதற்குகென்றே  சில ஸ்பெஷல் நடிகர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு ஒரு டிமாண்டும் இருந்து வந்தது . அதன்படி தன் நாடக்குழுவிலும் அப்படி ஒரு பிரச்சனையை சந்திக்க நேர, அப்போது எம்.ஆர்.ராதாவுக்கு பொன்னுசாமி பிள்ளையின் குழுவில் பார்த்த சிறுவன் கணேசனின் ஞாபகம் வந்தது. உடனே திருச்சியிலுள்ள அவர்கள் வீட்டுக்கு சென்று ஜட்கா வண்டியில் இறங்கினார் .

அவர் அழைப்பை கேட்டு கணேசன் தன் குரு எதார்த்தம் பொன்னுசாமிக்கு தெரிந்தால் வருத்தப்படுவாரோ என தயங்கினார் . உடன் அவர் அம்மா ராஜாமணியும் மகனை விடுவதாயில்லை. ஆனாலும் எம்.ஆர்.ராதா, ராஜாமணி அம்மாவிடம் உங்கள் மகனை நான் சகோதரனைபோல் பார்த்துகொள்கிறேன் என உறுதி கூறி அழைத்துச் சென்றார்.

அதன்பிறகு கணேசனின் வாழ்க்கையில் துவங்கியது, இன்னொரு புதிய அத்தியாயம் குழுவுடன் ஈரோட்டுக்கு சென்று முகாமிட்டார்.

அங்கு “லட்சுமி காந்தன்”,  “விமலா அல்லது விதவையின் கண்ணீர்” ஆகிய நாடகங்களை நடத்தலானார். அப்போது ஈரோட்டிலிருந்த பெரியாரின் “குடி அரசு” அலுவலகத்துக்கு சென்று பார்த்து வருவருவார். அப்படி ஒருமுறை குழுவுடன் செல்லும் போது சிவாஜியையும் அழைத்துச் சென்றார் . அப்போது அண்ணா, ஈ.வெ.கி.சம்பத் ஆகியோரும் அங்கே இருந்தனர். அப்பவே அண்ணாவுக்கும் சிவாஜிக்கும் ஒரு சந்திப்பு நிகழ்ந்திருந்தாலும் பிற்பாடு பல வருடங்களுப்பின் காஞ்சிபுரத்தில் தான் அது வரலாற்றின் திருப்பு முனை சந்திப்பாகவும் “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” நாடகத்தின் வழியாக நடந்தது.

உண்மையில் அப்போதே அந்த நாடகத்தை அண்ணா எழுதியிருந்தாலும், அப்போது ஈ.வெ.கி.சம்பத் தான் சிவாஜியாக நடிப்பதாக இருந்தது . பெரியார் தான் பின்னால் அண்ணாவிடம் தன் அண்ணன் மகனை கூத்தாடியாக்கினால் கெட்டுப்போவான்  என பயந்து அவனை நடிகனாக்கவேண்டாம் என எச்சரித்து அண்ணாவின் முடிவை மாற்றினார். இடைப்பட்ட காலத்தில் அந்த சிவாஜி பாத்திரத்துக்கு பல சீட்டுக்கட்டு கல் விழுந்து இறுதியில் சிவாஜியிடம் வந்து விழுந்தது காலம் எழுதிய திரைக்கதை.

ஒருவேளை அப்போதே அண்ணாவால் தேர்வு செய்யப்பட்டு சிவாஜியாக கணேசன் மாறியிருந்தால் ஒன்றும் நடந்திருக்க போவதில்லை. வாழ்க்கையில் பசி பட்டினியுடன் 40 மைல்களுக்கு நடந்தே வரவேண்டிய அவலமும் சினிமாவில் நடிகனாகும் வெறியும் அவருக்கு உண்டாகியிருக்காது . பராசக்தி படத்தில் பசியின் கொடுமையை இருத்தலுக்கான மனிதன் படும் துயரத்தை இன்னும் உணர்வுக்கு மிக நெருக்கமாக அவரால் சித்தரித்திருக்க முடியாது.

இடைப்பட்ட காலத்தில் அவர் பெற்ற அனுபவங்கள் தான் சிவாஜி எனும் உன்னத கலைஞன் உருவாக அடித்தளத்தை உறுதியாக அமைத்துக்கொடுத்தன.

ஆம்..

ஈரோட்டில் சில காலம் முகாமிட்ட எம்.ஆர்.ராதாவின் சரஸ்வதி கான சபா அடுத்து பொள்ளாச்சிக்கு சென்று முகாமிட்ட போதுதான் போதாத காலம் துவங்கியது. குழுவுக்கு பணம் போட்ட முதலாளிகளுடன் ஏற்பட்ட சண்டையை தொடர்ந்து எம்.ஆர்.ராதா சென்னைக்கு சென்றுவிட, அதன்பிறகு குழுவை சரியாக நடத்த ஆளில்லாமல் தடுமாற பெரும் வறுமை குழுவை சூழ்ந்தது.

ஒருமுறை கேரளாவில் பாலக்காட்டில் சென்று முகாமிட்ட போது தான் முதன் முறையாக கணேசன் , “மனோகரா” நாடகத்தில் மனோகரனாக நடித்தார். இந்த நாடகத்தை கொல்லங்கோடு மகாராஜா ஒரு நாள் பார்த்தார். சிவாஜியின் நடிப்பைப் பாராட்டி, வெள்ளித்தட்டு ஒன்றை பரிசளித்தார்.

நாடகக் கம்பெனியில் உடன் நடித்துக்கொண்டிருந்த தங்கவேலு என்ற நடிகர், சிவாஜியின் நெருங்கிய நண்பர் இவரும் திருச்சியை சேர்ந்தவர். அவரைப் பார்க்க வந்த அவர் அம்மா, அவனை திருச்சிக்கு கையோடு அழைத்து போக வந்திருந்தார். நாடகக் கம்பெனியில் மகன் கஷ்டப்படுவதை பார்க்க சகிக்காத அந்த அம்மா, மகனை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விட  தீர்மானித்தார். “கணேசா! நீயும் என்னுடன் வந்துவிடு” என்று தங்கவேலு அழைத்தார். சிவாஜிக்கும் ஒரு மாறுதல் தேவைப்பட்டது. எனவே, நண்பனுடன் கிளம்பத் தயாரானார். தங்கவேலுவின் உறவினர்கள் பொள்ளாச்சியில் இருந்தார்கள். அங்கு சென்று, அவர்களிடம்  உதவி பெற்றுக் கொண்டு, திருச்சிக்குப் போக முடிவு  செய்தார்கள். காட்டுப்பாதை கொல்லங்கோட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு  நடந்தே சென்றார்கள். காட்டுப்பாதையில் 40 மைல் நடக்க வேண்டும் வழியில் பலத்த மழை  பிடித்துக் கொண்டது. மழையில் நனைந்து கொண்டே சென்றார்கள் வழியில், “ஐயோ” என்று  தங்கவேலு அலறினார். சிவாஜி திரும்பிப் பார்த்தார் தங்கவேலுவின் கால் அருகே ஒரு  பாம்பு நெளிந்து போய்க்கொண்டு இருந்தது. தங்கவேலுவை பாம்பு கடித்து விட்டது என்பதை  சிவாஜி உணர்ந்து கொண்டார். அலறிக் கொண்டிருந்த தங்கவேலுவை தூக்கி தோளில் போட்டுக் கொண்டார். தங்கவேலுவின் தாயாரையும் அழைத்துக்கொண்டு, ஓட்டமும் நடையுமாக அருகில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்தார். அங்குள்ளவர்கள் வைத்தியரை அழைத்து, தங்கவேலுவுக்கு  தகுந்த சிகிச்சை அளித்தார்கள். தங்கவேலு பிழைத்துக்கொண்டார் பிறகு கிராமவாசிகளின்  உதவியுடன் சிவாஜியும், தங்கவேலுவும், அவர் தாயாரும் பொள்ளாச்சி சென்று, அங்கிருந்து  திருச்சிக்கு போய் சேர்ந்தார்கள். 

அந்த 40 மைல்கள் மழையிலும் வெயிலிலும் நடந்த பட்ட துன்பங்கள் அவருக்கு மிகப்பெரிய சொத்து என்பதும், அந்த அனுபவங்கள் நினைவுகள் தான் அவரை ஒரு முழுமையான மனிதனாகவும் கலைஞனாகவும் உருவெடுக்க சிற்பியாக செதுக்கி எடுத்ததன் என்பதையும் இன்று நாம் யோசிக்கிறோம்.ஆனால் சிவாஜி எனும் அன்றைய பதின் வயது கணேசனுக்கோ எதுவுமே தெரியாது. அவருக்கு அன்று தெரிந்தது எல்லாம் பசிக்கு சோறு செய்ய ஒரு வேலை இல்லாவிட்டால் திருச்சிக்கு வந்து ஒரு மெக்கானிக் வேலைக்கு எல்லாம் போய் கஷ்டப்பட்டிருப்பார்.

(தொடரும்)

– எழுத்தாளர். அஜயன் பாலா.

பின் குறிப்பு : ஆசிரியரின் தமிழ் சினிமா வரலாறு பாகம் ஒன்று 1916-1947 நாதன் பதிப்பகம் வெளியீடாக நூலாக வெளி வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து  இரண்டாம் பாகமாக இத்தொடர் 1948 துவங்கி தமிழ் சினிமாவின் முக்கிய வரலாற்றுத்தடங்களை விவரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *