WHO-வின்  தலைவராக மீண்டும் டெட்ரோஸ் அதானோம்

ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அங்கமாக செயல்படும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்துவருகிறார் எத்தியோப்பியாவை சேர்ந்த டெட்ரோஸ் அதோனோம். குறிப்பாக முதன் முறையாக ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் தலைவர் என்ற பெருமையும் கொண்டவராக விளங்கிவருகிறார். இப்பதவிக்கு வருவதற்கு முன்னதாக எத்தியோப்பியாவின் அரசியல் வாதியாகவும், கல்வியாளருமாக இருந்துள்ளார். இதோடு 2005 முதல் 2012 வரை சுகாதார அமைச்சராகவும், 2012 முதல் 2016 வரை வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். மேலும் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது மக்கள் சார்ந்த பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்ததோடு, அதன் ஒரு பகுதியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை நிறுவியுள்ளார். 

இப்படி மக்களின் நலன்களுக்காக பாடுபட்ட டெட்ரோஸ் உலக சுகாதார அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மிகுந்த சவாலான கொரோனா காலக்கட்டத்தையும் நேர்த்தியாக கையாண்டார் என்ற பெயர் பெற்றிருந்தார். இந்நிலையில் இவரது 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், வருகின்ற மே மாதம் புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் டெட்ரோஸ் தேர்தலைச் சந்திக்க வேண்டும் எனவும், மீண்டும் தலைவர் பதவியில் அமர வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. வருகின்ற மே மாதம் நடைபெறவுள்ள 75 வது உலக சுகாதார சபையில் முடிவு செய்யப்படும் என WHO வாரியம் ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளது.இந்த அறிவிப்பை ட்விட்டரில் பார்த்த இணையதள வாசிகள், ‘ இரண்டாவது முறையாக நீங்கள் தேர்வாவதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்’ என்றும் பெருந்தொற்று காலத்தில் உங்களது ஆலோசனைகள் எங்களுக்கு தேவை என்பது போன்ற கருத்துக்களை டிவிட் செய்து வருகின்றனர். இதோடு கொரோனா பெருந்தொற்று சமயத்தில் எவ்வித அச்சமும் இன்றி புத்துணர்வோடு பணியாற்றி உங்களைப்போன்ற தலைவர்கள் மீண்டும் வர வேண்டும் எனவும் பதிவிட்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *