“செல்லாது, செல்லாது”… அன்புமணிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பன்னீர்செல்வம்!

2021-2022ம் ஆண்டு வேளாண்மைத் துறையின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மொத்த அறிவிப்புகளில் 26 அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் வேளாண்மை நிழல் நிதி நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளதாக பத்திரிக்கையில்
வெளியான செய்தி தொடர்பாக வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

2021-2022 ஆம் ஆண்டு வேளாண்மைத் துறையின் நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 26 அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை என பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள வேளாண்மை நிழல் நிதி நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளதாக நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கடந்த 2021-2022 ஆம் ஆண்டு வேளாண்மைத் துறைக்கென முதன் முறையாக தனி நிதிநிலை அறிக்கை வேளாண் துறை அமைச்சரால் சட்டமன்றப் பேரவையில் 14.08.2021 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் மொத்தம் 86 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள 2022-2023-ஆம் ஆண்டின் வேளாண்மை நிழல் நிதி நிலை அறிக்கையில் அரசு அறிவித்துள்ள 26 அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, 26 அறிவிப்புகளில் 25 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் யாவும் வெளியிடப்பட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் வேளாண் துறையில் இயற்கை வேளாண்மைக்கு தனிப் பிரிவு, நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம், மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக் குழு, கொல்லிமலையில் மிளகு பதப்பபடுத்தும் மையம், முருங்கை சிறப்பு ஏற்றுமதி மண்டலம், உணவு பதப்படுத்துதலுக்காக தனி அமைப்பு, நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைத்தல், கூட்டுப் பண்ணையத் திட்டம், அதிக வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் மற்றும் சிக்கன நீர்ப்பாசன திட்டம் ஆகிய முக்கிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும் அடங்கும்.

திருச்சி-நாகப்பட்டினம் பகுதியினை வேளாண் தொழில் பெருந்தடமாக அறிவிப்பது குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் ஒப்பந்தபுள்ளி நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் இத்திட்டத்திற்கான ஆணைகள் வெளியிடப்படும். எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் வேளாண் நிழல் நிதி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள செய்தி மறுக்கப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.