அதிகாலையில் மட்டும் குளிர் அடுத்து முழுவதும் வறண்ட வானிலையே தொடரும்

வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் சற்றே ஓய்வு எடுக்கத் தொடங்கியுள்ளது. அதிகாலையில் பனிமூட்டமும் பகல் நேரங்களில் சுள்ளென்று வெயிலடித்தாலும் குளிர்ச்சியான காலநிலையே காணப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு பனிமூட்டமும் 4 நாட்களுக்கு வறண்ட நிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த நவம்பர் மாதத்தில் கொட்டித் தீர்த்தது. அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் இருந்தே மழை படிப்படியாக குறைய ஆரம்பித்துவிட்டது.

அதிகாலையில் எங்கும் பனிமூட்டமாக காணப்படுகிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இருந்தாலும் குளிர்ச்சியான காலநிலையே நிலவுகிறது. கொடைக்கானலில் உறைபனி தாக்கம் தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உறைபனி தாக்கத்தால் கொடைக்கானல் பூங்காவில் மலர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் 26.12.2021 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.வரும் 27ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *