தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் வறண்ட வானிலையே காணப்படும்

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த ஆண்டு இறுதி மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழையின் போது பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய்ததால் நீர்நிலைகள் அனைத்தும் ஓரளவு நிரம்பியது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. அதை தொடர்ந்து தமிழகத்தில் மலைப் பாங்கான பகுதிகளில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆனாலும், தற்போது இயல்பை விட அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதனால் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று முதல் வரும் 10ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.