அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஜப்பான் இளவரசி

ஜப்பானில், காதலித்த சாமானியரை திருமணம் செய்து கொள்வதற்காக இளவரசி பட்டத்தை துறந்த மேகோ, தங்கள் திருமண வாழ்க்கையை துவங்க அமெரிக்காவுக்கு புறப்பட்டார்.கிழக்காசிய நாடான ஜப்பானின் மன்னராக இருப்பவர் நருஹிட்டோ.

இவரது சகோதரரும், பட்டத்து இளவரசருமான புமிஹிட்டோவின் மகளான இளவரசி மேகோ, தன் கல்லுாரி நண்பர் கெய் கொமுரோவை காதலித்தார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.ஜப்பானில் அரச குடும்ப நபர்கள், வெளி நபர்களை திருமணம் செய்தால் அரசுரிமை, சொத்து, மானியம் ஆகியவற்றை இழந்து, அரண்மனையை விட்டு வெளியேற வேண்டியது கட்டாயம்.அப்படி வெளியேறுவோருக்கு, கவுரவமாக வாழ்க்கை நடத்த 10 கோடி ரூபாய் வழங்கப்படும். எனினும் இந்த பணத்தை ஏற்க இளவரசி மேகோ மறுத்து விட்டார். 

இதையடுத்து அக்., 26ம் தேதி எந்தவிதமான கொண்டாட்டங்களும் இன்றி, எளிமையான முறையில் இருவருக்கும் திருமணம் நடந்தது. பின், தன் இளவரசி பட்டத்தை மேகோ துறந்தார்; அரண்மனையை விட்டும் அவர் வெளியேறினார்.இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் தங்கள் திருமண வாழ்க்கையை துவங்க, மேகோ – கெய் கொமுரோ தம்பதி, நேற்று ஜப்பானில் இருந்து புறப்பட்டனர். அவர்கள் டோக்கியோ சர்வதேச விமான நிலையத்திற்கு சாதாரண மக்களைப் போல் வரும் காட்சிகள், ஜப்பான் ஊடகங்களில் செய்திகளாக வெளியாகின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *