ஹேக்கர்களை களம் இறக்கிய உக்ரைன் – பயப்படுமா ரஷ்யா?? 

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் பதற்றம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைனின் முக்கியமான இடங்களை நோக்கி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன. ரஷ்யாவின் போர் விமானங்கள் உக்ரைனுக்குள் தாழ்வான உயரத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. இந்த இக்கட்டான சூழலை ‘மூன்றாம் உலகப் போர்’ என்றே அனைவரும் கூறுகிறார்கள். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது.
சீனா, சிரியா போன்ற சில நாடுகள் மட்டுமே ரஷ்யாவின் நடவடிக்கைக்கு ஆதரவாக உள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கி 48 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. 300க்கும் அதிகமான உயிரிழப்புகள் உக்ரைன் தரப்பில் நிகழ்ந்திருக்கிறது. பல சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது. வான், கடல், தரை என அனைத்து விதத்திலும் உக்ரைனை தாக்கி வருகிறது ரஷ்யா. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி சென்று கொண்டிருக்கிறார்கள். பலர் பதுங்கு குழிகளில் பத்திரமாக தங்கியுள்ளார்கள். இந்நிலையில் கிழக்கு மற்றும் மத்திய உக்ரைனில் தாக்குதல் அதிகமாக இருப்பதால், மேற்கு எல்லையை நோக்கி பலர் சென்று கொண்டிருக்கிறார்கள்.
வான்வழி, கடல்வழி, தரைவழியாக நடத்தப்படும் தாக்குதலால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. தங்களை பாதுகாத்துக்கொள்ள உக்ரைன் தரப்பிலும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், உக்ரேனுக்கு ஆதரவாக உலக நாடுகளைச் சேர்ந்த ஹேக்கர் குழு ஒன்று கைகோர்த்துள்ளது. இந்த குழு ரஷ்யா மீது சைபர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. தங்களின் சைபர் போர் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என இக்குழு வெளியிட்ட அறிக்கையின் மூலம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எச்சரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக Anonymous என்னும் ஹேக்கர்ஸ் குழு ரஷ்யாவுக்கு எதிராக சைபர் போரை அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சியான RT news, அரசு வலைதளங்களை இந்த ஹேக்கர்ஸ் குழு இணைய தாக்குதலை DDoS attack நடத்தியுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளமும் இந்த சைபர் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. மேலும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக வலைதளத்தில் இருந்த தகவல்களை தாங்கள் கசியவிட்டுள்ளதாகவும் இந்த ஹேக்கர்ஸ் குழு தெரிவித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் மீது எந்த அறிவிப்பும் இன்றி போர் தொடுத்து அப்பாவி மக்களை கொல்கிறது. இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று சமூக நலன் சார்ந்து செயல்படும் ஹேக்கர் அமைப்பு அறிவித்துள்ளது.