பாகிஸ்தானுக்கு எதிராக பங்களாதேஷில் போராட்டம்..!

வங்கதேச மக்கள் அந்நாட்டு தேசிய அருங்காட்சியகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரங்கேற்றிய இனப்படுகொலையை கண்டித்தும், இந்த இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் மக்கள் போராடி வருகின்றனர்.
கடந்த 1971 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் வங்கதேசத்தில் கொடூரமான இனப் படுகொலையை நிகழ்த்தியது. இந்த இனப்படுகொலையில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த இனப் படுகொலையை நினைவு கூறும் நாளில் மக்கள் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தை வங்காளதேச குடிமக்கள் அமைப்பு முன்னின்று நடத்துகிறது.
இந்த போராட்டத்தின்போது வங்காள தேசத்தின் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்த இனப்படுகொலையை சர்வதேச அளவில் அங்கீகரித்து இந்த செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இந்த இனப்படுகொலையின் போது பாகிஸ்தான் ராணுவம் வங்காள தேசம் முழுவதையும் ரத்தக்காடாக மாற்றியது. அப்பாவி மக்களை கொன்று குவித்தது. பல பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மனித குல வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய இனப்படுகொலை இதுவாகும். பாகிஸ்தான் ராணுவம் 30 லட்சம் மக்களை இரக்கமின்றி கொன்று குவித்தது.
இந்நிலையில், இன்று அந்த சர்வதேச படுகொலைக்காக நியாயம் கேட்டு வங்கதேச மக்கள் போராடி வருகின்றனர். இதற்கு சர்வதேச அமைப்புகள் என்ன பதில் கூறப் போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.